திருவண்ணாமலை நகரில் விதிமுறைகளை மீறி ஓடிய 20 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை நகரில் ஆட்டோக்களால் நன்மைகளை விட சிரமங்களையே பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள் அனுபவித்து வருகின்றனர். குறைந்த அளவே ஆட்டோக்கள் ஓடி வந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்ததால் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. உள்ளூர் மக்களே 200, 300 ரூபாய் கொடுத்து பயணிக்கும் நிலை உள்ளது.
தற்போது நகரில் 2500 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது. இது மட்டுமின்றி வெளியூர் ஆட்டோக்களும் இங்கு இயக்கப்படுகின்றன. புற்றீசல்கள் போல் ஆட்டோக்கள் அதிகரித்து விட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
பல ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
அதன் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி தலைமையில் மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் ஆர்.பெரியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் பொன்சேகர் மற்றும் அலுவலர்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பெரிய தெரு - பேகோபுர தெரு சந்திப்பில் இன்று காலை திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவணங்கள் இல்லாமல் இருந்தது, தகுதி சான்று புதுப்பிக்காதது (Vehicle Fitness Certificate), அனுமதி சீட்டு பெறாமல் இருந்தது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது போன்ற விதிமீறல்களுக்காக 20 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதே போன்று மினி லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த ஆட்டோக்களில் வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை விதிமுறைக்கு உட்பட்டு இயக்கப்பட்ட ஆட்டோக்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி பத்திரமாக அனுப்பி வைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
30 நிமிட சோதனையிலேயே 20 ஆட்டோக்கள் சிக்கிய நிலையில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தி ஆட்டோக்களை முறைப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.