திருவண்ணாமலை மாடவீதி குடியிருப்பாளர்களுக்கு கார் பாஸ் வழங்க நடத்தப்பட்ட முகாம்களில் 2 ஆயிரம் விண்ணப்பங்களை பொதுமக்கள் பெற்றுச் சென்றதை பார்த்து அதிகாரிகள் திகைத்தனர்.
திருவண்ணாமலையில் மாடவீதி பகுதிகளிலுள்ள குடியிருப்புவாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை (பாஸ்) வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடந்தன.
காந்திசிலை, கடலைக் கடை மூலை, திருவூடல் தெரு மேடு, பெரிய தெரு ஆகிய இடங்களில் இதற்கான சிறப்பு முகாம்கள் 2 முறை நடத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் உரிய ஆவணங்களை இணைத்தும் வழங்கினர். மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் ஆர்.பெரியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் பொன்சேகர், உதவியாளர் ம.சௌபர்ணிகா ஆகியோர் விண்ணப்பங்களை பெற்றனர்.
இந்த முகாம்களில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் பொதுமக்களால் வாங்கிச் செல்லப்பட்டிருப்பதை பார்த்து மாடவீதிகளில் இவ்வளவு வாகனங்களா இருக்கும்? என அதிகாரிகள் திகைத்தனர்.
மாடவீதி பகுதிகளில் உரிய விலாசத்தில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களே பாஸ் வழங்கப்படும், இது அந்த பகுதிகளில் சொந்த இடங்களில் வியாபார நிறுவனங்கள், மருத்துவமனைகள், லாட்ஜ்கள் போன்றவற்றை நடத்துபவர்களுக்கு பொருந்தும். கட்டிடம் இந்த இடங்களில் இருந்து வீடு வேறு இடத்தில் இருப்பவர்களுக்கு பாஸ் வழங்குவது குறித்து அமைச்சர், கலெக்டர் முடிவெடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
--------------------------------