சட்டம்-ஒழுங்கு கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில் தமிழகம்

சட்டம்-ஒழுங்கு கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில் தமிழகம் உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோட்டில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(எஸ்டிபிஐ) சார்பில் வக்பு உரிமை மீட்பு மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, 

வக்பு திருத்த சட்ட மசோதா என்பது முஸ்லீம்களின் வக்பு சொத்துகளை திருடும் மசோதா. இந்த மசோதா இந்தியாவுக்கு அவசியமில்லை. இது தேன் கூட்டில் கை வைத்த கதையாக மாறிவிடும். சிவன் சொத்து குலநாசம் என்பது போல் வக்பு சொத்து ஆபத்திலும், அழிவிலிலும் கொண்டு போய் விட்டு விடும். 

தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும். மதுரையில் உள்ள வக்பு வாரிய கல்லூரியில் காலியாக உள்ள 26 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நிரந்தரமான நிர்வாகிகளை நியமித்து அக்கல்லூரி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் வக்பு வாரிய சொத்துக்கள் தனியாராலும், அரசாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை மீட்க போராட்டங்களை நடத்தி வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் மசூதிக்கு சொந்தமான 15 ஏக்கர் காலி இடத்தை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள செஞ்சி மஸ்தான் ஆக்கிரமிக்கிறார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு கிலோ என்ன விலை? என கேட்கும் நிலையில் தமிழகம்

செஞ்சி மஸ்தானை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எதற்காக எடுத்தீர்கள்? என்ன குற்றச்சாட்டுக்காக எடுத்தீர்கள்? அந்த குற்றச்சாட்டு சரியாகி விட்டதா? நீதிமன்றம் சரி என்று சொல்லி விட்டதா? மீண்டும் மாவட்ட செயலாளராக அவரை நியமித்திருக்கின்றனர். இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே?  

திருவண்ணாமலை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 56 ஏக்கர் நிலத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டு தர மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை. 

சட்டம்-ஒழுங்கு கிலோ என்ன விலை என கேட்கிற நிலையில் தமிழகம் உள்ளது. 

என்னை அப்பா என்று அழைக்கும் போது பூரிப்படுகிறேன் என தமிழக முதல்வர் சொல்கிறார். அது தவறில்லை. ஆனால் அப்பாவாக தன்னை உருகப்படுத்திக் கொள்கிற தமிழக முதல்வர், அவரது பிள்ளைகளாக இருக்கக்கூடிய தமிழக மக்கள் கஞ்சாவால், சாராயத்தினால், தீண்டாமை வன்கொடுமையினால், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் போது கண்டு கொள்ளாமல் தன்னை அப்பா என்று அழைக்கும் போது புலாங்கிதம் அடைகிறேன் என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. 

சட்டம்-ஒழுங்கு கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில் தமிழகம்

எல்லா போராட்டங்களையும் திசை திருப்புகிற நடவடிக்கைகள் தான் இந்த ஆட்சியில் உள்ளது. அதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கிற தமிழக முதல்வருக்கு இருக்கிறதா? இல்லையா? என தெரியவில்லை.

பாஜக எதிர்ப்பு என்ற ஒன்றை விட்டு விட்டால் தமிழக அரசுக்கு சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எங்கு சென்றாலும் ஏமாற்றம், தவறான புள்ளி விவரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை. பாஜக என்ற பூச்சாண்டியை காட்டி தேர்தலை சந்தித்து விடலாம் என முதலமைச்சர் நினைக்கிறார். 

திருப்பரங்குன்றம் பிரச்சனை காரணமே அரசுதான். தமிழக அரசு நிர்வாகத்தன்மையை இழந்திருக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்திருக்கிறது. கையில் கிடைத்திருக்கும் நிர்வாகத்தை மிக மோசமாக பயன்படுத்துகிற அரசாக இந்த அரசு உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வரப்போவது உறுதி. 

இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது மாவட்டத் தலைவர் முஸ்தாக்பாஷா, மாவட்ட பொதுச் செயலாளர் ஷபீர்பாஷா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.