தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும்

தமிழ்நாடு அரசு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு அரசு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநிலப் பொருளாளர் ஏ.இப்ராஹீம் தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் எஸ்.முஹம்மத் யாஸிர் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பிலும், மாவட்ட தலைவர் ஏ.முஹம்மத் ரியாஸ் இறையச்சம் என்ற தலைப்பிலும், மாவட்ட செயலாளர் ஏ.ஸமியுல்லாஹ் தஃவா_பணிகள் என்ற தலைப்பிலும், மாவட்ட பொருளாளர்  கே.அப்துல் ரஹ்மான் பொருளாதாரம் என்ற தலைப்பிலும், மாவட்ட துணைத் தலைவர் சி.காதர் ஷரீப் சமூக வலைத் தளங்களும், சமூக அக்கறையும் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் புதிய மாவட்ட தலைவராக ஏ.ஸமியுல்லாஹ், மாவட்ட செயலாளராக எம்.அமீன் கான், மாவட்ட பொருளாராக ஏ.எம்.ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணைத் தலைவராக கே.அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளராக டி.ஷபீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

முடிவில் மாவட்ட செயலாளர் எம்.அமீன்கான் நன்றி கூறினார். 

சாதிவாரிக் கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்து இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வது. குடியிருப்பு பகுதிகளில் வெறி நாய்கள் மிக அதிகமாக காணப்படுகிறது. பலரை நாய் கடித்திருக்கிறது. ஆகவே பொது மக்களின் நலனை கவனத்தில் கொண்டு வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.

டாக்டர்கள் பற்றாக்குறை 

வந்தவாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் மக்கள் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல மருத்துவமனை நிர்வாகமே அறிவுறுத்துகிறது. ஆகவே இதை உடனடியாக கவனத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்களை நியமித்து, மனித நேய பண்போடு சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வது, 

தமிழ்நாடு அரசு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும்

போக்குவரத்து நெரிசல் 

திருவண்ணாமலை மாநகரம் நாளுக்கு நாள் மிகப் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் என அனைவரும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆகவே இதை கவனத்தில் கொண்டு உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட, மாநகர நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து போக்குவரத்து நெரிசலை சீர்படுத்திட வேண்டும்.

வீட்டுமனைப் பட்டா

திருவண்ணாமலை மாநகரில் குறிப்பாக அண்ணா நகர், மாரி அம்மன் கோவில் தெரு, கோபால் தெரு, புதுத் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 40, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். ஆகவே அவர்களின் நலனை கவனத்தில் கொண்டு இப்பகுதி மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கிட ஆவண செய்ய வேண்டும், 

மாணவிகளுக்கு பாதுகாப்பு 

திருவண்ணாமலை மாநகரில் பள்ளி, கல்லூரிகளில் காலை, மாலை நேரங்களில் குறிப்பாக பெண்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் கடந்த காலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியாற்றினார்கள். ஆனால் தற்போது சில மாதங்களாக காவலர்கள் இருப்பதில்லை. இதனால் பெண்கள் படிக்கும் கல்வி நிலையங்களுக்கு அருகில் தேவையில்லாமல் இளைஞர்கள் சுற்றுவது அதிகமாகி அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. ஆகவே கல்வி நிலையங்களுக்கு அருகில் குறிப்பாக காலை, மாலை வேளைகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் 

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.