திருவண்ணாமலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவன் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவரது தந்தை போலீஸ்துறையில் பணியாற்றி வருகிறார்.
இது குறித்த விவரம் வருமாறு,
திருவண்ணாமலை-வேலூர் ரோட்டில் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்டத்திலேயே சிறந்த மதிப்பெண்ணை பெறும் பள்ளியாக திகழ்ந்து வருகிறது. இங்கு 2450 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் துர்க்கைநம்மியந்தலைச் சேர்ந்த சூர்யா(வயது 16) என்ற மாணவர் 11-ஆம் வகுப்பில் படித்து வந்தார். இவரது தந்தை ஏழுமலை(58) சென்னையில் போலீஸ் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ஆம் தேதி காலையில் பள்ளிக்கு சென்ற அவரது மகன் சூர்யா மாலையில் பள்ளி முடிந்து வந்த போது பள்ளி கேட் அருகே மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காலையில் உற்சாக பள்ளிக்கு சென்ற மாணவன், பிணமாக திரும்பியதை பார்த்து பெற்றோரும், உறவினரும் கதறி அழுதனர். இச்சம்பவம் அந்த கிராமத்திலும், உடன் படிக்கும் மாணவர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என போலீசார் கூறினர்.
இது குறித்து ஏழுமலை, கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.