கார்களுக்கு பாஸ் வழங்க நாளை சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாடவீதி குடியிருப்பாளர்களின் கார்களுக்கு பாஸ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

கார்களுக்கு பாஸ் வழங்க நாளை சிறப்பு முகாம்

இது குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்து வகை வாகனங்களின் போக்குவரத்தை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு  தலைமயில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த ஜனவரி 17ந் தேதி அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாடவீதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாசிகளின் சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை மட்டும் மாடவீதி பகுதிகளில் அனுமதிக்க அடையாள வில்லை வழங்க முடிவெடுக்கப்பட்டது. அடையாள வில்லை பெற திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்க தெரிவித்து ஆட்டோ வாகனத்தில் ஒலிபெருக்கி கொண்டு அறிவிக்கப்பட்டது,

கடந்த 25ந்தேதி காந்தி சிலை பெரிய தெரு கிருஷணா லாட்ஜ், திருவூடல் தெரு (கடலை கடை சந்திப்பு), திரௌபதி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. விண்ணப்பத்துடன் குடியிருப்பு முகவரிக்கான ஆவணம் மற்றும் வாகனத்தின் ஆவணங்களை இணைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.


தற்போது திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நலன் கருதி நாளை 1ந் தேதி (சனிக்கிழமை) மீண்டும் முகாம் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.

எனவே, காந்தி சிலை. பெரிய தெரு கிருஷணா லாட்ஜ், திருவூடல் தெரு (கடலை கடை சந்திப்பு), திரௌபதி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் வருகிற சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளார் அட்டை,பாஸ் போர்ட் ஆகிய குடியிருப்பு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாகனத்தின் ஆவணங்களான பதிவு சான்று. காப்பு சான்று, புகைச் சான்று ஆகியவற்றுடன் இணைத்து திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். 

நான்கு மாடவீதி பகுதிகள், வட ஒத்தவாடை, தென் ஒத்தவாடை தெரு ஆகியவற்றில் உள்ள குடியிருப்பாளர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்படும் என்றும், மேற்கண்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். 
-------------------------------------