திருவண்ணாமலையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க அதிமுகவினர் பேரணியாக வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அம்மா பேரவை சார்பில் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து துவங்கியது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
ஏராளமான அதிமுக தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து வந்தனர்.
அதிமுக ஆட்சியில் 55 சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை அண்ணா நுழைவு வாயில் அருகே கடை கடையாக எஸ்.ராமச்சந்திரனும், பெருமாள்நகர் ராஜனும் விநியோகித்தனர்.
தொண்டர்கள் அதிக அளவில் வந்ததால் திகைத்து போன போலீசார், போலீஸ் வாகனத்தை குறுக்கே நிறுத்தி மேற்கொண்டு பேரணி செல்ல முடியாமல் தடுத்தனர்.
துண்டு பிரசுரங்களை வழங்குவதற்கு தான் அனுமதி, பைக் பேரணி நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று போலீசார் கூறினர். போலீசாரிடம் பெருமாள்நகர் ராஜன் பேச்சுவார்தை நடத்தினர். பிறகு பேரணி தொடர்ந்தது. சிறிது தூரம் சென்றதும் வாகன பேரணியை தடுத்து நிறுத்தும் வகையில் ரோட்டின் குறுக்கே பேரி கார்டுகளை வைத்து போலீசார் ஒவ்வொருவராக செல்ல அனுமதித்தனர். இதனால் போலீசாரோடு அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு தொடர்ந்து ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். காமராஜர் சிலை அருகே இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது.