ஆதரவற்ற பிரேதங்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும், பிணத்தை வைத்து சம்பாதிக்கும் கூட்டத்தை அனுமதிக்க கூடாது எனவும், கலெக்டருக்கு மோகன் சாது கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை ஓம் ஆத்ம லிங்கேஸ்வரர் அறக்கட்டளை நிறுவன நிர்வாக இயக்குனர் ரா.மோகன் சாது, மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை சாதுசன்னியாசிகள் பெரும்பாலானார் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். உடல் நலம் குன்றும் சாதுக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போகின்றனர்.
மேலும் கிரிவலப் பாதையில் இயற்கை மரணம் அடைவதாலும் அவர்களை இனம் கண்டு அடையாளம் காண முயற்சி இன்றி சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்பால் ஆதரவற்ற பிரேதங்கள் என முடிவு செய்து அவர்களை முறைப்படி சாதுக்கள் முறையில் நல்லடக்கம் செய்யாமல் ஏனோ தானோ என்று எமலிங்கம் சுடுகாட்டில் புதைத்து விடுகின்றனர். அதன் காரணமாக அவர்களை உறவினர்கள் தேடி அலையும் நிலை உள்ளது.
![]() |
மோகன் சாது |
இதற்கு முடிவு கட்டும் வகையில் ஆதரவற்ற பிரேதங்களை அடையாளம் காண வேண்டும், அப்படி காணப்பட்ட பிரேதங்கள் உறவினர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். சாதுக்கள் பிரேதங்களை திருவண்ணாமலையில் சாதுக்களே நல்லடக்கம் செய்ய வேண்டும். மாற்று மதத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்களை இந்து சாதுக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க கூடாது.
பிணத்தை வைத்து பணத்தை சம்பாதிக்கும் கூட்டம் திருவண்ணாமலையில் பெருகிவிட்ட காரணத்தினால் அப்படிப்பட்டவர்களுக்கு அனுமதி தரக்கூடாது. அப்படிப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மேற்கு காவல் நிலையம் அருகில் வலம்புரி விநாயகர் கோயில் எதிரில் சுமார் 45 வயது தக்க ஒரு சாமியார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறால் இயற்கை மரணம் அடைந்தார்.
இதுபற்றி அறிந்த ஓம் ஆத்ம லிங்கேஸ்வர அறக்கட்டளை நிறுவனர் மோகன் சாது, மேற்கு காவல் நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களது ஆலோசனை பேரில் இறந்தவரின் உடைமைகளை பரிசோதனை செய்து இறந்தவரின் சகோதரி அனிதா நம்பரை கண்டெடுத்து அவரை தொடர்பு கொண்டனர்.
அப்போது இறந்தவர் பெயர் கலைக்குமார் என்றும், திருமணம் செய்யாமல் திருவண்ணாமலைக்கு வந்து சாதுக்களோடு தங்கியதும் தெரிய வந்தது. அவரது குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு காவல்துறை விசாரணை முடிந்து அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவரின் உடலை முறைப்படி ஒப்படைத்த மோகன் சாதுவின் தன்னலமற்ற சேவையை கலைக்குமாரின் உறவினர்கள் பாராட்டினர்.