திருவண்ணாமலை மண்ணில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க ஜெ. பேரவை சார்பில், அ.தி.மு.க 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் பொதுமக்கள் விவசாயிகள்,பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சாதனைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமையில் நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூர் பை-பாஸ் ரோடு அருகில் தொடங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக சென்று வியாபாரிகள், குடியிருப்பாளர்கள், பொதுமக்களிடம் 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் வழங்கிய நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜனுடன், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பெருமாள்நகர் ராஜன், திருவண்ணாமலையில் 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். இங்கும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒற்றுமையுடன் வருகிற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற களப்பணியாற்ற வேண்டும். என்னுடைய ஆசை திருவண்ணாமலை மண்ணில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என கூறினார்.
அதிமுக இதுவரை வெற்றியை கண்டிராத தொகுதியான திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என பெருமாள் நகர் ராஜன் கூறியதும் கூடியிருந்த கீழ்பென்னாத்தூர் தொகுதி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கரவொலியை எழுப்பி அவரது கருத்தை ஆமோதித்தனர்.
துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அரங்கநாதன், நகர செயலாளர்கள் கீழ்பென்னாத்தூர் ஓ.சி.முருகன், வேட்டவலம் கே.செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் சி.தொப்பளான், ஜெயப்பிரகாஷ், கலியபெருமாள், மற்றும் ராஜந்தாங்கல் ராஜபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.