திருவண்ணாமலை அருகே ஜவுளி கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் தீயில் கருகி நாசமானது.
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் தொகுதி பருவதமலை அடிவாரத்தில் உள்ள தென்மாதிமங்கலம் கிராமத்தில் நித்தியா என்ற ஜவுளிக்கடை உள்ளது.
இன்று காலை கடையை திறந்த அதன் உரிமையாளர், பிறகு மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது அப்போது காலை 9 மணி அளவில் கடையின் உள்ளே தீப்பிடித்தது. தீ மற்ற இடங்களுக்கு மளமளவென பரவியது.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் ஜவுளி கடையில் இருந்த துணிகள் தீயில் கருகி நாசமாயின. ரூ.15 லட்சம் சேதம் ஏற்பட்டதாக கடையின் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![]() |
கடை ஓனரிடம் தீவிபத்து குறித்து கேட்டறிந்த பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ |
மேலும் மின் கசிவினால் ஜவுளி கடையில் தீப்பிடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த தீ விபத்து குறித்து கடலாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.