திருவண்ணாமலை வருவாய் ஆய்வாளரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை தாலுகா வருவாய் ஆய்வாளராக(ஆர்.ஐ) பணி புரிந்து வந்தவர் சுதா. தற்போது இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலம் எடுப்பு பிரிவில் ஆர்.ஐ-யாக உள்ளார். செங்கம் ரோடு பாவாஜி நகரில் வசித்து வருகிறார்.
சுதாவின் கணவர் செந்தில்குமார்(வயது 43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செந்தில்குமார் திருவண்ணாமலை மண்டித் தெருவில் நெல் மண்டி வைத்திருக்கிறார்.
இன்று(21ந் தேதி) மாலை அவரது நண்பர் அந்த மண்டிக்கு சென்றார். அப்போது மண்டி திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையின் ஷட்டரில் கயிறால் செந்தில்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் உடனடியாக செந்தில்குமாரின் மனைவி சுதாவிற்கு தகவல் தெரிவித்தார்.
அவர் இது சம்மந்தமாக திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செந்தில்குமாருக்கு கடன் அதிக அளவில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடன்காரர்கள் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவண்ணாமலை பஜாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.