ஊராட்சி மன்ற தலைவரின் பேரன் படுகொலை

திருவண்ணாமலை அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அவரது பேரனும் மர்ம நபர்கள் தாக்கப்பட்டனர். இதில் 32 வயதே ஆன அவரது பேரன்  மூளை சிதைந்து பரிதாபமாக இறந்தார். 

ஊராட்சி மன்ற தலைவரின் பேரன் படுகொலை

திருவண்ணாமலை அடுத்த சிறுநாத்தூரில் வசித்து வருபவர் கோபால் (வயது 88). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது பேரன் கார்த்திகேயன் (32) அதே ஊரில் இ.சேவை மையம் நடத்தி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.

நேற்று இரவு கோபால் தனது பேரன் கார்த்திகேயனுடன் தனது நிலத்தில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்டு கோபால் எழுந்து சென்று கதவை திறந்தார். 

அப்போது வெளியில் நின்றிருந்த மர்ம நபர்கள் இரும்பு ராடல் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு உள்ளே நுழைந்தனர். உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயனை கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும், இரும்பு ராடால் தாக்கியதாகவும்  சொல்லப்படுகிறது. 

இதில் கார்த்திகேயன், தலையில் பலத்த அடிபட்டு மூளை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பிறகு கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். 

அதிர்ச்சியில் உறைந்திருந்த கோபால் இது குறித்து ஊருக்குள் சென்று தெரிவித்தார். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கோபால்,  சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ஊராட்சி மன்ற தலைவரின் பேரன் படுகொலை
கார்த்திகேயன்

மோப்ப நாய்'மியா'வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து ஓடி சிறிது தூரம் போய் நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொலை குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் அம்பிகா ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

வீட்டின் முன் இருந்த மண்மேட்டை அகற்றியது சம்பந்தமாக கொலையான கார்த்திகேயனுக்கும், வேறு சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவும் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஊராட்சி மன்றத் தலைவரின் பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.