உலக நன்மைக்காக முதல் முறையாக கிரி ஆரத்தி சிறப்பு பூஜை திருவண்ணாமலையில் நடைபெற்றது.
உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம். உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஆகும். திருவண்ணாமலை பஞ்ச பூத தலங்களில் நெருப்பு தலமாக விளங்குகிறது.
சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். நெருப்பாக இருக்கும் சிவபெருமானை குளிர்விக்க ஆனி மாதத்தில் 16 வகையான குளிர்ந்த பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.
மேலும் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்குக் கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. திருவண்ணாமலையில் தீபத்திருநாள் கொண்டாடப்படுவதும், மலை உச்சியில் ஜோதி ஏற்றப்படுவதும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்நிலையில் முதன்முறையாக அண்ணாமலைக்கு மகா ஆரத்தி காட்டும் நிகழ்ச்சி கரூர் சிவமாலயன் அறக்கட்டளை சார்பில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பக்கத்தில் உள்ள சந்தை மேட்டில் நேற்று இரவு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக அகில பாரதிய சன்னியாசிகள் சங்க தலைவர் ரமானந்தா, ஆதிசைவ ஆச்சாரிய பீடம் 65 -வது பீடாதிபதி சிவராஜ ஆச்சாரியார், கும்பகோணம் மவுன சாமி மடம் ஆனந்த ஞானேஸ்வரி தீர்த்த சுவாமிகள், சிவசக்தி சுருளி அம்மாள் பீடம் அருணை மாதாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காசி கங்கை நதியில் கங்கை ஆரத்தி பூஜை செய்யும் 7 சிவனடியார்கள், சிவன் மலையான அண்ணாமலையை நோக்கி மலர்களை தூவியும், ஊதுபத்தி, சாம்பிராணி புகை காட்டியும் பூஜைகளை துவக்கினர். பிறகு இரண்டரை அரை அடி உயரம் கொண்ட சர விளக்குகளை கொண்டு பிரம்மாண்ட தீபம் ஏற்றி கிரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனையை காட்டினர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ கந்தவேல் ஜோதி மஹா சபா அறக்கட்டளை நிர்வாக தலைவர் வடபழனி கமல் என்கிற கமலக்கண்ணன், சேலம் கோபால் சித்தர் பீடம் சு.ஜெயராஜ் சுவாமிகள், திண்டுக்கல் சித்தர்கள் மகா பொற்சபை நிறுவனர் ஆ.சோ.குமரவேல் நாயனார், கரூர் ஆ.மாதேஸ்வரன் சுவாமிகள், கும்பகோணம் ஆனந்த ஞானேஸ்வரர் தீர்த்த சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
நதிகளை பாதுகாக்க ஆறுகளுக்கு மகா ஆரத்தி எடுத்து வரும் சிவனடியார்கள், முதன்முறையாக மலைக்கு மகா ஆரத்தி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.