திருவண்ணாமலை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் விவசாயி உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை அடுத்த மணலூர் பேட்டை செல்லும் சாலையில் உள்ளது காட்டாம்பூண்டி கிராமம். இங்குள்ள புது தெருவில் வசித்து வந்தவர் வெள்ளைக்காரனின் மகன் ரவி (வயது.40) விவசாயி.
கடந்த 20-ஆம் தேதி இரவு ரவி, வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினார். அவரது மனைவி சாந்தி(35) அதிகாலை எழுந்த போது கணவர் இல்லாததை பார்த்து அப்பகுதியில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பிறகு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்துப் பார்த்தார். கணவர் போன சுவடு தெரியவில்லை.
இதையடுத்து சாந்தி, தச்சம்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனது சொந்த நிலத்தில் உள்ள தரை கிணற்றில் ரவி பிணமாக மிதந்த நிலையில் இருந்தார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இன்று காலை அவரது உடல் வெளியில் எடுக்கப்பட்டது. அப்போது அவரது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மேன் மிஸ்சிங் வழக்கை சந்தேக மரணம் என மாற்றி தச்சம்பட்டு போலீசார், ரவி இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவியின் கை, கால்கள் வலுவான கயிற்றால் கட்டப்பட்டு தலையில் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் இது கொலையாக இருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் காட்டாம்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.