திருவண்ணாமலையில் அருணை தமிழ்சங்கம் சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆன்மீக விருதான கிருபானந்த வாரியார் விருதை அப்துல் ரகுமான் பெற்றார்.
திருவண்ணாமலை காந்தி நகரில் அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் இன்று மாலை நடைபெற்ற தமிழர் திருநாள் விழாவில் பரதநாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், போர்ப்பறை, தெருக்கூத்து, நாட்டுப்புறப் பாட்டு. ஆகியவை நடைபெற்றது.
மாலையில் சாதனையாளர்களுக்கு விருதுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், கவிஞர் வைரமுத்து வழங்கினார்.
தமிழ் தொண்டாற்றியதற்காக திருவண்ணாமலை வட்டம் கார்ணாம்பூண்டியைச் சேர்ந்த காமராசுக்கு மறைமலை அடிகளார் விருதும், வந்தவாசி பகுதியில் சமூக தொண்டாற்றிய ஹேமமாலினிக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருதும், கலைத் தொண்டாற்றிய பள்ளிகொண்டாப்பட்டைச் சேர்ந்த ஜமா படத்தின் கதாநாயகன் பாரி இளவழகனுக்கு கலைவாணர் என்.எஸ்.கே.விருதும், ஆன்மீக தொண்டாற்றியதற்காக திருவண்ணாமலை நகரில் 32 ஆண்டுகளாக திருக்குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் எடுத்துக் கூறி வரும் அப்துல் ரகுமானுக்கு கிருபானந்த வாரியார் விருதும், சமூகநீதிக்காக தொண்டாற்றிய வேட்டவலத்தைச் சேர்ந்த திராவிடர் கழக நிர்வாகி பட்டாபிராமனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.
மேலும் 39 வார்டுகளிலும் வண்ண கோலப் போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு ஒவ்வொரு வார்டிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் 5 முதல் 8 பரிசுகள் வீதம் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5500 மதிப்புள்ள கிரைண்டரும் இரண்டாம் பரிசாக ரூ.4000 மதிப்புள்ள தோசை தவா-கேஸ் ஸ்டவ், மூன்றாம் பரிசாக ரூ.3000 மதிப்புள்ள கரண்ட் அடுப்பு - குக்கரும், ஆறுதல் பரிசாக ரூ.2000 மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
திருவண்ணாமலை ஆன்மீக பூமி. இங்கு இருக்கின்ற அழியாத மலை போன்று நாங்கள் துவக்கி இருக்கிற அருணை தமிழ் சங்கமும் அழியாமல் நிலைத்து நிற்க வேண்டும். தமிழ் கடவுள் என பெருமைப்படுவது முருகன். முருகனை வெளிநாட்டுக்குத் தெரியும். அங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றனர். வட இந்தியாவில் முருகனை பெருமைப்படுத்துவதில்லை.திருப்புகழைப் பாடியவர் அருணகிரிநாத பெருமான். தமிழை வளர்த்த பெருமை பக்தி இலக்கியங்களை சார்ந்ததாக இருக்கிறது என சான்றுகள் கூறுகிறது.
கண்ணதாசனை அழைத்து நிகழ்ச்சி நடத்தியவன் நான். எனக்கு நெருக்கமாக இருந்தவர் வாலி. நானும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். பாடலை எழுதியிருக்கிறேன். நான் தயாரித்த கலைஞர் தொலைக்காட்சி தொடரிலும் வைரமுத்துவின் பாடல் இடம் பெற்றிருக்கிறது. புலமைப்பித்தன் எனக்கு நண்பராக இருந்தவர்.
ஆனாலும் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதிய பெருமை வைரமுத்துவையே சாரும். அவரது பாடலும் இளமையாக இருக்கிறது. உருவமும் இளமையாக இருக்கிறது. நிலாவை கையில் பிடித்தேன் என் ராசாவுக்காக என்ற பாடல் எனது மனதில் அழுத்தமாக இருக்கிறது, எனக்கு பிடிக்கிறது. தமிழனால் நிலாவுக்கு போக முடியும் என்ற நம்பிக்கை உருவாக்கும் மையக் கருத்து அந்தப் பாடலில் உள்ளது.
சமூக நீதிக்கு பெயர் போன மண் தான் இந்த மண். திராவிடமும் ஆன்மீகமும் இரண்டற கலந்து பயணிக்கிற மண்தான் இந்த திருவண்ணாமலை மண். இங்கு இருக்கிற பெரும்பான்மையானவர்கள் காலையில் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு போவார்கள். மாலையில் என்னோடு கைகோர்த்துக்கொண்டு பகுத்தறிவு கூட்டத்திற்கு வந்து பாசறை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இங்கே இருப்பவர்கள்.
தமிழ்நாட்டில் எந்த மண்ணிலும் இல்லாத வாடை இங்கு இருக்கிறது. திராவிடமும் ஆன்மீகமும் இரண்டு பயணிக்கிற ஊர் இந்த ஊர். எல்லா மதத்திலும் ஆன்மீகத்துக்கு தொண்டு செய்கிறார்கள். இஸ்லாத்தில் நபிகள் நாயகம், அல்லாவிற்கு தொண்டு செய்கிறார்கள். அந்தந்த மதத்தில் செய்வது ஆன்மீக தொண்டு தான். அதில் மாற்றமில்லை. இஸ்லாமியத்திற்கு தொண்டு செய்த அப்துல் ரகுமானுக்கு, இந்து மதத்திற்கு தொண்டு செய்த அருணகிரிநாதர் பெயரால் விருது வழங்கும் புரட்சியை அருணை தமிழ் சங்கம் செய்திருக்கிறது.
நானும் படம் எடுத்தேன், தயாரிப்பாளராக இருந்தேன். எனக்கு தோன்றாதது தெருக்கூத்து நாடகம். தெருக்கூத்திலிருந்துதான் நாடகம். நாடகத்திலிருந்து தான் திரைப்படம். அதிலிருந்துதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இதற்கு அடிப்படையாக இருந்தது தெருக்கூத்து. இந்த மண்ணில் பிறந்த பாரி இளவழகன் ஜமா என்ற படத்தை எடுத்தார். அது எப்பேர்ப்பட்ட படம். படத்தை பார்த்து 5 மணி நேரம் ஆனந்த கண்ணீர் விட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் வைரமுத்து பேசியதாவது,
எ.வ.வேலு, கல்வி நாயகன், கல்விக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இரண்டு முதலமைச்சர்களால் பாராட்டப்பட்டவர் அமைச்சர் எ.வ.வேலு. எ.வ.என்றால் ஏவாமலே பணி செய்கிறவர் என கருணாநிதியால் கொண்டாடப்பட்டவர். எ.வ.என்றால் எதிலும் வல்லவர் என ஸ்டாலினால் பாராட்டப்பட்டவர். எனது சார்பில் ஒரு பாராட்டு. எ என்றால் எல்லோருக்கும் என்பதாகும். வ என்றால் வள்ளல். எல்லாருக்கும் வள்ளல். எ.வ.வேலு, நினைத்ததை முடிப்பவர் என்று சொன்னால் மிகையில்லை.
வாழ்க்கையில் இரவும் பகலும் போராடுகிறீர்கள். பதவி வேட்டை, புகழ் வேட்டை, பொருள் வேட்டை என மனிதன் வேட்டையாடிக் கொண்டே இருக்கிறான். வேட்டை கலாச்சாரத்தை விட்டு விட்டு மனிதன் வேளாண்மை கலாச்சாரத்துக்கு வந்து வேளாண்மை கலாச்சாரத்தை தாண்டி தொழில் யுகத்துக்கு வந்து தொழில்நுட்ப யுகத்திற்கும் வந்து விட்டாலும் கூட முதல் கலாச்சாரமான வேட்டை கலாச்சாரத்தை இன்னும் அவன் விட்டு விடவில்லை. வேட்டை என்பது மாறுவேடம் போட்டு பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையில் கூடாடிக்கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. நீங்கள் வேட்டையில் காயப்படுகிறீர்கள், இதற்கு மாற்று என்ன?
இஸ்லாமிய சகோதரர் வாரியார் பேரில் விருதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது திருவண்ணாமலையின் மத நல்லிணக்கத்தை காட்டுகிறது. இதை தமிழ்நாடு அல்ல, இந்தியாவும் பின்பற்ற வேண்டும். இந்தியாவின் வழிகாட்டி திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் நிகழ்ந்த இந்த நிகழ்வு இந்த மண்ணுக்கு கிடைத்த வரம்.
தமிழ் சங்கம் அதிகாரம் மையம் அல்ல, உதவி செய்வதற்கும், பதவி பெறுவதற்கும் ஊடு வழி அல்ல. கேள்வி கேட்க வேண்டும், விவாதங்களை ஏற்படுத்த வேண்டும். சில பழைய கருத்துக்களை பரிசீலிக்க வேண்டும்.
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. இது சரியா என கேள்வி எழுப்ப வேண்டும். போக்கு காட்டும் திருடனை பிடித்து குற்றவாளியாக கூண்டில் நிறுத்துவதுதான் போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை. இந்த பொருள் இடையில் சிதைந்து இருக்கிறது.
பெண் புத்தி பின் புத்தி. பின்னால் வருவதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே சொல்வது இதுதான் இதற்கு அர்த்தம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வுகளை தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற வேண்டும். உங்கள் புத்தியை செழிக்க வைப்பது தமிழ், உங்கள் புத்தியை வெளுக்க வைப்பது மது. அது தேவையில்லை அதை விட்டு விட்டு தமிழுக்கு வாருங்கள்.
திருவள்ளுவர் மிகப் பெரிய அறிவாளி தான், மிகப்பெரிய ஞானவேந்தன் தான், மிகப்பெரிய தத்துவ மேதை தான். அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் திருவள்ளுவன் தத்துவ மேதை தான் காமத்துப்பாலில் அவனை போல ஒரு குசும்பன் எவனும் கிடையாது. அதற்குத்தான் பொருள் எழுதி கொண்டிருக்கிறேன்.
ரவிவர்மன் எழுதாத கலையோ என்ற பாட்டில் பூமாலையே உன்னை மணப்பேன், புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன் என எழுதி இருந்தேன். பாட்டு ஹிட், படம் பெயிலியர். அந்த பாடல் இடம் பெற்ற வசந்தி என்கிற படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை. காதல் ஓவியம் படம் மகத்தான தோல்வி பாட்டுக்கு எந்த தோல்வியும் இல்லை. மூன்று தலைமுறை கழித்து கூட காதல் ஓவியம் பாட்டுக்கு உங்களை மாதிரி பலர் கைதட்டி கொண்டே இருப்பார்கள். அதில் மாற்றமில்லை.
முதல் இரவுக்கு போகிற பெண்ணை புதுச்சேலை கசங்காமல் அணைப்பதெல்லாம் ஒரு அணைப்பா? என நான் அமெரிக்கா சென்ற போது என்னிடம் ஒருவர் கேட்டார். சேலை கசங்கும் என்று நினைத்தால் அவன் காதலன் அல்ல, சலவை தொழிலாளி. சேலை கசங்க வேண்டும், பூக்கள் உதிர வேண்டும், பொட்டு அழிய வேண்டும். இதெல்லாம் இருந்தால் தானே முதலிரவு என கேட்டார்.
நான் சொன்னேன் பாட்டில் தப்பு செய்யவில்லை தம்பி, அந்த நேரத்தில் புது புடவைக்கு விடுமுறை என்று அர்த்தம். விடுமுறை விடப்பட்ட சேலை எப்படி கசங்கும்?. அதை காலையில் கசங்காத சேலையாக கட்டி அவள் வெளியே வருவாள். உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, அனுபவம் இல்லை என்று சொல்லி அனுப்பினேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, தரணிவேந்தன். சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா. ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன், அருணை தமிழ்சங்க செயலாளர் வே.ஆல்பர்ட், பொருளாளர் எம்.இ.ஜமாலுதீன், இணைச் செயலாளர் எ.வ.குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Social Plugin