பிச்சைக்காரர்கள் தொல்லை- கலெக்டர் புதிய அறிவிப்பு

யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் அறிவித்துள்ளார். இதனால் பிச்சைக்காரர்களின் தொல்லை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிச்சைக்காரர்கள் தொல்லை- கலெக்டர் புதிய அறிவிப்பு

பிச்சை எடுப்பது ஒரு குற்றமாக உள்ளது. பிச்சை. பாடுதல், நடனம் ஆடுதல், தந்திரங்கள் செய்தல், பிச்சை கேட்பதற்காக அல்லது பெறுவதற்காக ஏதேனும் ஒரு தனியார் வளாகத்தில் நுழைவது, மிரட்டி பணம் பறிப்பது, தனக்கு அல்லது வேறு எந்த நபரின் அல்லது விலங்குகளின் புண், காயம், காயம், குறைபாடு அல்லது நோய் ஆகியவற்றை வெளிப்படுத்துதல், பிச்சை கேட்கும் அல்லது பெறுவதற்கான ஒரு காட்சிப் பொருளாக தன்னைப் பயன்படுத்த அனுமதித்தல் என இவையெல்லாம் குற்றத்தில் வருகிறது.

இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை உண்டு. இருப்பினும், போக்குவரத்து சிக்னல்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்களில் குழந்தைகளைப் பயன்படுத்தி ஏராளமான மக்கள் பிச்சை எடுப்பது குறைவில்லை. ஐதாராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற பிச்சைக்காரர்களை அடையாளம் காண்பவர்களுக்கு ரூ.500 வெகுமதி அளிக்கும் முறையை சிறைத்துறை கடந்த 7 வருடங்களுக்கு முன் நடைமுறைபடுத்தியது. வினோதமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாசகம் வழங்குபவர்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகமாக உள்ளது. பக்தர்களை துரத்திச் சென்று மடக்கி பிச்சை எடுப்பதையும், 1ரூபாய், 2ரூபாய் கொடுப்பவர்களையும், யாசகம் போடாதவர்களை திட்டுவதையும் இங்கு அடிக்கடி பார்க்கலாம். அண்ணாமலையார் கோயில் கோபுர வாசப்படி, மாடவீதி போன்ற முக்கிய வீதிகளில் இவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. பேகோபுரம் அருகே பக்தரை மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் யாசகம் கேட்பவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

பிச்சைக்காரர்கள் தொல்லை- கலெக்டர் புதிய அறிவிப்பு

யாசகம் கேட்டல் தடுப்புச் சட்டம்-1945ன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைக்க ஆணை பெறப்பட்டுள்ளது. யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லங்களை நடத்த தகுதியான தொண்டு நிறுவனத்தை கண்டறிந்து செயல்படுத்தி அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் யாசகம் பெறுவோருக்கான மறுவாழ்வு இல்லம் அமைக்க, அனுபவமுள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றது.

விண்ணப்பத்துடன் கூடிய கருத்துரு 31.01.2025 அன்று மாலை 5.45-க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டாட்சியர் அலுவலக வளாகம், பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை- 606601 என்ற அலுவலக முகவரிக்கு வந்துசேர வேண்டும்.

மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண் : 04175 – 223030. அலைபேசி எண் : 6382614143, 6382614197 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்

இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

--------------------------- 

போட்டோ-பார்த்திபன்