அண்ணாமலையார் பாதத்திற்கு நடைபெற்ற பிராயசித்த அபிஷேகம்

தோஷம், தீட்டு விலக திருவண்ணாமலை மலை மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு இன்று பிராயசித்த அபிஷேகம் நடைபெற்றது. 


அண்ணாமலையார் பாதத்திற்கு நடைபெற்ற பிராயசித்த அபிஷேகம்

சமய உலகில் புகழ்பெற்ற திருத்தலங்களில் சிறப்பு பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். கயிலை மலையில் இறைவன் இருப்பதால் சிறப்பு. ஆனால் இங்கு மலையே சிவலிங்கமாக காட்சியளிப்பது மாபெரும் சிறப்பாகும். மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. 

ஆயிரமாயிரம் தபஸ்விகளும், சித்தர்களும், அரூபமாக இம்மலையில் உறைந்துள்ளனர். ஆகையால் தான் இதன் சக்தி, ஆற்றல் அளப்பரியதாக உள்ளது. இதனால்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். 

சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சியளித்த 2668 அடி உயர இந்த மலையின்  உச்சியில் கடந்த மாதம் 13-ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்பட்டது. 11நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த மகா தீபம் 29-ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. அதிலிருந்து 11-வது நாள் மலை உச்சியில் இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். 

கைலாய மலை சிவபெருமானுடைய இருப்பிடமாக கருதப்படுகிறது. இம்மலையை ஏறுவதற்கு தடையில்லை. ஆனால் மலையே சிவனாக விளங்கும் திருவண்ணாமலை மலை மீது நமது பாதங்கள் படுவது பாவமாக கருதப்படுகிறது. 

அண்ணாமலையார் பாதத்திற்கு நடைபெற்ற பிராயசித்த அபிஷேகம்

பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் பாறைகள் உருண்டு விழுந்தன. உயிர் பலிகளும் ஏற்பட்டது. 5 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மலையின் தோற்றமே வித்தியாசமாக காட்சி தந்தது. பல இடங்களில் பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதாக வல்லுநர் குழு அறிக்கை அளித்ததால் கடந்த கார்த்திகை தீபத்தின் போது பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கடைசி 2 நாட்கள் ஏராளமான பக்தர்கள் மலையேறி மகா தீபத்தை தரிசித்தனர்.  

எனவே தோஷம், தீட்டு விலக பிராயசித்த அபிஷேகம் இன்று (3-1-2025) நடைபெற்றது. அண்ணாமலையார் கோயில் ஒன்றாம் பிரகாரத்தில் இதற்காக புனித நீர் கொண்ட கலசத்தை வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு புனித நீர் கொண்ட கலசம், மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு பால், தயிர், சந்தனம் போன்ற திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

அண்ணாமலையார் பாதத்திற்கு நடைபெற்ற பிராயசித்த அபிஷேகம்

பிறகு பாதத்திற்கு பூ, பழம், தேங்காய் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு புனித நீர் தெளிக்கப்பட்டது. பாதத்திற்கு நடத்தப்படும் அபிஷேகம் 2668 அடி உயரமுள்ள மலைக்கே அபிஷேகம் செய்வதாக ஐதீகமாகும்.