ரூ.3 கோடியே 32 லட்சம் பாக்கி வைத்துள்ள வியாபாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு மாநகராட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல ஓட்டல் அதிபரின் பெயர் முதலிடத்தில் உள்ளது.
திருவண்ணாமலை நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 440 கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் மத்திய பஸ் நிலையத்தில் அமைந்துள்ளன. இதே போல் பஜாரில் உள்ள ஜோதி மார்க்கெட்டில் உள்ள பூ கடைகளும் மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும்.
இந்நிலையில் இந்த கடைகளின் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளுக்கும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். வியாபாரிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக வாடகை பாக்கியை வசூலிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். கடைகளுக்கு சீல் வைக்கப்படும் போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
நகராட்சி கடைகளுக்கு அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பூ வியாபாரிகள் சங்கம், சொந்த இடத்தில் கடைகளை கட்டும் முடிவை எடுத்துள்ளது. இதற்காக மணலூர்பேட்டை ரோட்டில் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் கடைதாரர்கள் வைத்துள்ள பாக்கி விவரத்தை குறிப்பிட்டு மாநகராட்சி, மத்திய பஸ் நிலையத்தின் முன்புறம் பெரிய பேனரை வைத்துள்ளது.
அதில் பிரபல ஓட்டல் உரிமையாளர் பெயர் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இது உள்பட திமுக பிரமுகர் மற்றும் வியாபாரிகள் 23 நபர்களின் பெயரும் உள்ளது. இவர்கள் மொத்தம் 3 கோடியே 32 லட்சத்து 96 ஆயிரத்து 417 ரூபாயை பாக்கியாக வைத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதி அறிவிப்பு என அந்த பேனரில் தெரிவிக்கப்பட்ட விவரம் வருமாறு,
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் வாடகையினை ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்குள் செலுத்த ஏல விதிகளின் படி தங்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேரில் அறிவுறுத்தியும், அறிவிப்பு கடிதங்கள் 10.05.2024, 25.09.2024, 06.11.2024, 06.12.2024 மற்றும் 02.01.2025 வழங்கப்பட்டும் வந்தது.
இதுநாள் வரை வாடகை செலுத்தாதது நகராட்சி ஏல விதிகளுக்கு முரணானதாகும். எனவே எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிலுவைத் தொகை முழுவதும் (டிசம்பர் 2024 வரை) செலுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன் காவல்துறையின் ஒத்துழைப்புடன் கடையினை பூட்டி சீல் வைக்கப்பட்டு, தங்களுக்கு வழங்கப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடையினை பொது ஏலம் விடப்படும் எனவும், அதில் இழப்பு ஏதும் ஏற்படின் தங்களை பொறுப்பாக்கி தங்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை தொடரப்படும் எனவும் இதன் மூலம் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.
மீதமுள்ள கடை குத்தகைதாரர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
எம்.காந்திராஜ், ஆணையாளர் |
பாக்கிதாரர்களின் பெயரை குறிப்பிட்டு மாநகராட்சி ஆணையாளர் வைத்த பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.