திருவண்ணாமலை மலை பகுதியில் வசிப்பவர்களுக்கு தீர்வு என்ன?

திருவண்ணாமலை மலை பகுதியில் வசிப்பவர்களுக்கு உரிய தீர்வு காண்பது குறித்து தமிழக முதல்வரிடம் பேச இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 

http://www.youtube.com/@AgniMurasu

திருவண்ணாமலை வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் பகுதியில் (பெரும்பாக்கம் ரோடு) தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை),  எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி), ஆகியோர் உடனிருந்தனர். 

அதன்பிறகு அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திருவண்ணாமலையில் 1972க்கு பிறகு பெய்த எதிர்பாராத பெருமழையின் காரணத்தினால் மலை குளிர்ச்சியடைந்து, பாறை உருண்டு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சார்ந்த 7 நபர்கள் இயற்கை எய்தி விட்டார்கள். அதையொட்டியுள்ள பகுதியில் வசிக்கின்ற மக்கள் பயம் உணர்வுடன் அங்கு வசிக்க முடியாது என்று என்னிடம் கூறினர். 

நானும், மாவட்ட ஆட்சித்தலைவரும் தற்காலிகமாக இதற்கு முடிவு எடுக்கலாம் என்று கலந்து ஆலோசித்திருக்கிறோம். நிரந்தரமாக முடிவு எடுக்க தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆலோசனை செய்ய உள்ளோம். ஆபத்துக்குரிய இடங்களில் 20 குடும்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை வேறொரு இடத்தில் வாடகை வீட்டில் வசிக்க வைத்திருக்கிறோம்.

அவர்களுக்கு இருப்பிட வசதிகள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு புறம்போக்கு நிலத்தினை காட்டியுள்ளார்கள். இந்த நிலத்தில் தற்காலிகமாக 20 வீடுகள் அமைப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளோம். இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பின்னர், பொங்கல் அன்று அவர்கள் இந்த வீடுகளில் வசிக்கிறதற்கு ஏற்பாடு செய்யப்படும். 

திருவண்ணாமலை மலை பகுதியில் வசிப்பவர்களுக்கு தீர்வு என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் அடிப்படை  கருத்து என்னவென்றால் மலைப் பகுதியில் வீடுகள் இருக்கக்கூடாது என்றும், ஆன்மீக பகுதி என்பதாலும், இங்கு வருகின்ற பக்தர்கள் மலையே கடவுளாக எண்ணி வழிபடுகிறார்கள். மேலும் பக்தர்கள் மலையை மையப்பகுதியாக வைத்து தான் 14 கி.மீ தொலைவில் கிரிவலம் செல்கின்றனர் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நீதிபதியை நியமினம் செய்து, மூன்று முறை இங்கே ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் மலைப் பகுதியில் பட்டா இல்லாமல் வீடு கட்டிருப்பவர்கள் மற்றும் பட்டா வைத்திருந்து வெளியில் வசிப்பதற்கு ஒப்புதல் அளிப்பவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. 

எனவே இதற்கு தீர்வு காண்பதற்கு மக்கள் பிரதிநிதியாக இருக்கிற நான், முதலமைச்சரிடம் பேச இருக்கிறேன். மாவட்ட ஆட்சித்தலைவரும் இங்கிருக்கிற சூழ்நிலையை அறிந்து முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த 20 தற்காலிக வீடுகளையும் அமைச்சர் எ.வ.வேலு தனது சொந்த செலவில் கட்டித் தர உள்ளதாக கூறப்படுகிறது. 

------------------------------------