திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. சட்ட விரோத ஆக்கிரமிப்புகளையும், குள ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மலையே சிவன்தான், அங்கு எப்படி கழிப்பிடங்கள் கட்ட அனுமதிக்கலாம்? என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த குழு 2 முறை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் பெஞ்சல் புயலால் பலத்த மழை பெய்ததில் திருவண்ணாமலை மலையில் 5 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. வஉசி நகரில் மண் சரிவில் உருண்டு வந்த பாறை வீட்டின் மீது விழுந்ததில் 7 பேர் இறந்தனர். மலையில் ஏற்பட்ட மண் சரிவை புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறையின் புவியியல் வல்லுநர்கள் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.
அதில் பல இடங்களில் பெரிய பாறைகள் பெயர்ந்து உருண்டு விழும் அபாய நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மலை மீது ஏறி மகாதீபத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மலை அடிவாரத்தில் அபாயகரமான பகுதியில் வசிக்கும் 20 பேர் வெளியேற்றப்பட்டு நகரில் வாடகை வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாக்கம் ரோட்டில் தற்காலிக வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது.
மலையடிவாரத்தில் பட்டா இல்லாத வீடுகள், பட்டா உள்ள வீடுகள், மலையடிவாரத்தை விட்டு வெளியேற விருப்பம் தெரிவிப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பை வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கணக்கெடுப்பில் 1535 வீடுகள் புறம்போக்கில் உள்ளது தெரிய வந்துள்ளதாகவும், அதில் 500 பேர் காலி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இதை மறுத்துள்ள குடியிருப்புவாசிகள் விருப்ப மனுவில் கையெழுத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வீட்டை காலி செய்ய விருப்பம் என அதிகாரிகளே எழுதிக் கொள்வதாக புகார் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் இன்று பேகோபுரம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து தடைபட்டது.
அப்போது ஒருவர், நின்று கொண்டிருந்த பஸ்சின் முன் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் அகற்றினர்.
இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறோம். அதுவரை கணக்கெடுப்பு பணி நடக்காது என பேச்சு வார்த்தையின் போது அதிகாரிகள் உறுதி அளித்ததால் சாலைமறியல் போராட்டத்தை பொது மக்கள் விலக்கிக் கொண்டனர்.
Social Plugin