மகா தீபத்தன்று பக்தர்களை மலை மீது ஏற அனுமதிப்பது குறித்து அரசின் சார்பாக முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மலை மீது ஏற்பட்ட மண் சரிவில் 7 பேர் இறந்தனர். மலை மீது பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த வருடம் மகா தீபத்தை மலை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
உளவுத்துறையும், வனத்துறையும் இதே கருத்தை வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் இன்று (08.12.2024) திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து ஆய்வு செய்ய வருகை புரிந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர் குழு மலை மீது ஏறி மண் மற்றும் பாறையின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்களுடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியனும் சென்றிருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக தீபமலையில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து ஆய்வு செய்ய வருகை தந்துள்ள வல்லுநர்கள் குழு தீபமலை மீது ஏறி மண் மற்றும் பாறையின் தன்மை குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்துறை, சுரங்கத்துறை, இந்திய புவியியல் ஆராய்ச்சித் துறை, உள்ளிட்ட துறை சார்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் திருவண்ணாமலை தீபமலையின் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்து நிபுணர்களின் ஆய்வு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள்.
அதன் அடிப்படையில், கார்த்திகை தீபதிருநாளன்று பக்தர்களை மலை மீது ஏற அனுமதிப்பது குறித்து அரசின் சார்பாக முடிவு செய்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குநர் ஆறுமுகநயினார், உதவி இயக்குநர்கள் லட்சுமி ராம் பிரசாத் (திருவண்ணாமலை), சுந்தரராமன் (திண்டுக்கல்), சென்னை அண்ணா பல்கலைகழக மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்துறை பேராசிரியை பிரேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.
உறுதியாக உள்ள மகா தீபம் ஏற்றும் இடம் - வீடியோ...
Social Plugin