திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தூய்மைப்பணிகளில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்கள் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஏற்பாடு செய்தார்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வெளிமாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதையடுத்து 21 நகராட்சிகள், திருவண்ணாமலை, சேலம் மாநகராட்சி சார்ந்த ஊழியர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்ந்த பணியாளர்கள் என மொத்தம் 4000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
மொத்தம் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முழு மூச்சாக குப்பைகளை அகற்றிய தூய்மைப்பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசரினத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஏற்பாடு செய்ததோடு அவர்களின் பணியினை பாராட்டினார்.
மக்கள் பணியே, மகேசன் பணி என்று எண்ணி அனைத்து குப்பைகளையும் அகற்றி, கிரிவலப்பாதையில் தூய்மையாக பராமரித்து குப்பைகள் அனைத்தையும் துரிதமாக அகற்றிய துப்புரவு பணியாளர்களை மனதார பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
கோயிலில் 400 தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு, அவர்களுடன் அமர்ந்து கலெக்டர் உணவருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.மணி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், மாநகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜ் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Social Plugin