தீபத்திருவிழாவில் கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட போலீசை கண்டித்து அரசு அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார துணை தலைவர் வ.சம்பத் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பிரேம்குமார் ஊராட்சி செயலாளர்கள் எம்.சுகுமார் எஸ்.பழனி ஏ.காசிராஜன் சி.லட்சுமணன் கே.ராமஜெயம் எம்.ரமேஷ் பி.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் எம்.கோபால் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட துணை தலைவர் த.சந்தோஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
"கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் தமிழ்நாடு காவல்துறையை கண்டிக்கிறோம், கார்த்திகை தீபத்திருவிழாவில் பணியில் ஈடுபடவந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகளை கண்டிக்கிறோம், கார்த்திகை தீபத்திருவிழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம், நடவடிக்கை எடு நடவடிக்கை எடு, காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு, உடனடி நடவடிக்கை எடு, திணிக்காதே திணிக்காதே கிரிவலபாதையில் துப்புரவு தூய்மைப்பணி, கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது திணிக்காதே திணிக்காதே" போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிவில் ஊராட்சி செயலாளர் பி.செல்வமணி நன்றி கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போல் போலீசாரின் செயலை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பு தலைவர்கள் ஸ்ரீதர், சையது ஜிலால், ரமேஷ், விஜயகுமார், ரமணன், ஆனந்தகுமார், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போலீசை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் ரகுபதி நன்றி கூறினார்.
Social Plugin