திருவண்ணாமலையில் இறந்த மனைவி உடலுடன் 3 நாட்களாக கணவர் வீட்டில் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அரசமரத்தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமாரி(வயது 55). செங்கம் ரோட்டில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவரது கணவர் லோகநாதன். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக விஜயகுமாரி உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
அவர்கள் இருந்த வீடு கடந்த 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. விஜயகுமாரியை அவருடன் வேலை செய்பவர்கள் தேடி வந்த போது கதவை லோகநாதன் திறக்கவில்லையாம்.
நேற்றும் சென்று பார்த்த போது கதவு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் தெருவாசிகளிடம் சொன்னார்கள். மாமன்ற உறுப்பினர் திலகம் ராஜாமணி மற்றும் தெருவாசிகள் சென்று கதவை திறக்க சொன்னதற்கு லோகநாதன் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து கதவை நெம்பி திறந்து சென்று பார்த்த போது விஜயகுமாரி, தரையில் படுத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கால்களை எலிகள் கடித்திருந்தன.
இறந்தது தெரியாமல் மனைவி உடலுடன் அவரது கணவர் 3 நாட்களாக இருந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.