மலையில் புவியியல், சுரங்கத்துறை வல்லுநர்கள் நாளை ஆய்வு
திருவண்ணாமலை மலைக்கு ஆக்ஸிஜன் கருவி, மீட்பு குழுவினருடன் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது புவியியல் மற்றும் சுரங்கத்துறை தொழில் நுட்ப வல்லுநர்கள் நாளை காலை 7 மணிக்கு ஏறி ஆய்வு செய்ய உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (07.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு மேற்கொள்ள வந்திருக்கும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கனமழையினால் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக வருகின்ற 13.12.2024 அன்று நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பக்தர்களை மலை ஏற அனுமதிப்பது குறித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் தன்மையை ஆய்வு செய்வதற்காக வருகை தந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்ந்த வல்லுநர்கள் குழு நாளை காலை 7 மணியளவில் மலை மீது ஏறிச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளது.
![]() |
இக்குழுவுடன் காவல்துறை சார்பாக பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் குழு மற்றும் பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, இரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப் படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக்குழு, வனத்துறை சார்ந்த வனச்சரகர் மற்றும் வனபாதுகாவலர்கள் குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழு உள்ளிட்டவர்களை அனுப்புவதற்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசர கால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழு பணியில் இருக்கவும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Social Plugin