சென்னை மக்கள் புண்ணியம் செய்திருக்கிறார்களா? திருவண்ணாமலை மக்கள் பாவம் செய்திருக்கிறார்களா? என அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கேட்டார்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் 21ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை செங்கம் சாலை (ஆணாய்பிறந்தான் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்) பெருந்திடலில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அன்புமணி ராமதாஸ் இன்று பார்வையிட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் வருகிற 21ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை நகரத்தில் மிகப்பெரிய உழவர் மாநாட்டை நடத்த இருக்கிறோம். மாநாட்டில் லட்சக்கணக்கான உழவர்கள் கூட இருக்கிறார்கள்.
உழவர்களை எங்களுடைய கடவுளாக பார்க்கிறோம். அவர்கள் இன்றைய சூழலில் மிக மோசமான நிலையில் உள்ளனர். அவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாநாட்டை நடத்த இருக்கிறோம். இது போன்ற மாநாட்டை எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை. நடத்தப் போவதுமில்லை.
உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 கொடுக்க வேண்டும், கரும்பு ஒரு டன்னுக்கு குறைந்தது ரூ.5000 கொடுக்க வேண்டும். பயிராக இருந்தாலும் சரி, பூக்களாக இருந்தாலும் சரி, கனியாக இருந்தாலும் சரி, காய்கறியாக இருந்தாலும் சரி அத்தனைக்கும் குறைந்தபட்ச விலை தர வேண்டும். இதை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
எத்தனையோ உழவர்கள் தூக்கு கயிறில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதையுடன் வாழ முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது. திராவிடர் மாடல் அரசுக்கு உழவர்களின் கஷ்டங்கள் புரிவதில்லை. எத்தனையோ பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கலாம். 38 மாவட்டங்கள் உள்ளது. சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கனை ஆங்காங்கே உருவாக்க வேண்டும். உழவர்கள் விளைச்சல் பயிர்களை எல்லாம் அங்கேயே விலைமதிப்பு கூட்டுதல் போன்றவற்றை செய்து நல்ல விலையை தரலாம். இதை மேற்கத்திய நாடுகள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். நீர் பாசன திட்டங்கள் எத்தனையோ நிலுவையில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல வருடங்களாக கேட்டுக் கொண்டே வருகிறோம். ஒவ்வொரு முதலமைச்சரும் வந்து நந்தன் கால்வாய் நிறைவேற்றுவோம் என்று சொன்னதை கேட்டு காது எல்லாம் புளித்து விட்டது. அலுத்து போய்விட்டது. இன்னும் செயல்படுத்தவில்லை. இது சாதாரண ஒரு திட்டம். ஆனால் மனசு வரவில்லை.
விளைநிலங்களை தமிழக அரசு வலுக்கட்டயமாக ஆக்கிரமிப்பு செய்து பெரும் முதலாளிகளுக்கு தானமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடுக்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவு சார் நகர் என 1200 ஏக்கர் விளையும் பூமியை அதிகாரத்தை வைத்து அபகரித்து பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்க்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறில் 3500 ஏக்கர் முப்போகம் விளையும் பூமியை சிப்காட்டுக்கு கொடுக்கிறார்கள். எதிர்த்த ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் தள்ளிய ஆட்சி இந்த கொடுங்கோல் ஆட்சிதான். இந்தியாவில் எங்கும் விவசாயிகளை இதுபோன்று குண்டர் சட்டத்தில் அடைக்கவில்லை. இது விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி. விவசாயிகளை பாமகத்தான் போராடி மீட்டது.
தமிழ்நாட்டில் 63 விழுக்காடு உழவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவருடைய வாழ்க்கை நிலை படுமோசமாக இருக்கிறது இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற மாநாடுகளை நடத்தி வருகிறோம். மாநாடோடு நிறுத்தப் போவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் இதில் பங்கேற்க வேண்டும். நம்மாழ்வார், நாராயணசாமி நாயுடு வாழ்ந்த மண். அப்போதெல்லாம் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இப்போது ஆங்காங்கே பிரிந்து அந்த கட்சி, இந்த கட்சி என்ற சாயத்துடன் பிரிந்து இருக்கிற காரணத்தினால் தான் எந்த அரசு வந்தாலும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
இந்த மாநாட்டினால் ஒரு திருப்புமுனை ஏற்படும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் உள்பட விவசாயிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி போராட்டங்களை நடத்தினோம்.
மற்ற கட்சிகள் விளம்பர அரசியல் செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் மக்கள் பிரச்சினைகளை குறிப்பாக விவசாயிகள் பிரச்சனைகளை பேசி வருகிறோம். யாரும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை. உதட்டு அளவில் பேசுகிறார்களே தவிர மனசளவில் எந்த கட்சியுமே செயல்படவில்லை. விவசாயத்துக்கான ஒரு முழுமையான அறிவிப்பு ஏதும் வரவில்லை.
திமுக அரசு முதலாளிக்காக செயல்பட்டு கொண்டிருக்கிற அரசாக நான் பார்க்கிறேன். மத்திய அரசையும் நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் நடத்தப்பட்ட பேரணிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம். தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் ஆரம்பத்தில் பயனடையக் கூடிய விவசாயிகளின் எண்ணிக்கை 12 கோடியிலிருந்து 6 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு அதை இன்னும் குறைந்து விட்டது. விவசாயிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது.
பெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் போய் சேரவில்லை. எல்லாரும் கஷ்டத்தில் உள்ளனர். திமுக அரசால் நடந்தப்பட்ட வெள்ளம் இது. வெள்ளம் சாத்தனூர் அணையை விடியற்காலையில் ஒரு வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி முன்னறிவிப்பின்றி திறந்ததால் மிகப்பெரிய வெள்ளம் வந்து வீடுகள் நாசமாகிவிட்டது. இதனால் 19 பேர் இறந்திருக்கின்றனர். புயலினால் 30லிருந்து 33 பேர் இருந்திருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் எந்த நிவாரணம் போய் சேரவில்லை. சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கிறார்கள்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சென்னையில் வெள்ளம் வந்தால் அங்கு இருக்கிற மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 6000 ரூபாய் தரும் அரசு வட மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு 2000 தருவது பாரபட்சாகும். சென்னைக்கு ஒரு நீதி? வட மாவட்டங்களுக்கு ஒரு நீதியா? சென்னை மக்கள் புண்ணியம் செய்திருக்கிறார்களா? திருவண்ணாமலை மக்கள் பாவம் செய்திருக்கிறார்களா? இது ஒரு வன்மமான செயலாக பார்க்கிறேன். எல்லோருக்கும் சமமாக அல்லவா கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கிற 2000 ப்ளீச்சிங் பவுடருக்கு கூட ஆகாது.
மதுரை டங்ஸ்டன் சுரங்கம் தொடங்குவதற்கு 5500 ஏக்கர் பரப்பளவில் நிலம் எடுத்து கையகப்படுத்தி தொடங்குவதற்கு மத்திய அரசு ஏலம் விட்டு இருக்கிறார்கள். 10 மாதம் அமைதியாக இருந்து விட்ட திமுக அரசு, மக்கள் போராட்டம் நடத்துவதனால், அரசியல் கட்சிகள் கேள்வி கேட்பதனால் உடனே நாங்களும் எதிர்க்கிறோம் என்று உல்டாவாக சொல்வது பொய் ஆகும். அந்த சுரங்கம் வருவதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது. மிகப்பெரிய எதிர்ப்பை காட்டி போராட்டங்களை நடத்துவோம். அதற்கு திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் பதவியில் இருக்கும் வரை இந்த சுரங்கத்தை விடமாட்டேன் என்று சொல்கிற முதல்வர் என்எல்சி சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கு ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறேன். கடலூருக்கு ஒரு நியாயம்? மதுரைக்கு ஒரு நியாயமா?
இந்த ஆண்டில் 18 ஆண்டு நாட்கள் மட்டுமே சட்டசபை கூடியிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாக நான் பார்க்கிறேன். குறைந்தது 100 நாட்கள் நடத்த வேண்டும். 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொகுதி பிரச்சினையை வெறும் 18 நாட்களில் பேச முடியுமா? மக்களை ஏமாற்றுவதுதான் திராவிடம் மாடலா? தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது? நீங்கள் 14 நாள் தான் சட்டமன்றத்தை நடத்துகிறீர்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் திமுக அரசின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். கோபம் என்று கூட சொல்ல மாட்டேன். ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு இரங்கல்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகப் பெரிய அதிர்ச்சியை அடைந்தேன். தமிழக அரசியலில் நீண்ட காலமாக ஒரு சிறந்த தலைவராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி தெரிவித்திருக்கிறார்.
அப்போது பாமக மாநில கௌரவ தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி மாநில செயலாளர் வேலுச்சாமி பாமக மாவட்ட செயலாளர்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம் இல.பாண்டியன் அ.கணேஷ்குமார் ஆ.வேலாயுதம் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் க.நாராயணசாமி மாவட்ட தலைவர் மு.பெரியசாமி உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கோ.சிவக்குமார் மாவட்ட தலைவர் அக்ரி ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.
Social Plugin