திருவண்ணாமலை:பள்ளி செல்லாதவர்கள் 4ஆயிரம் பேர்
எஸ்.டி. சான்று தந்தால் பள்ளிக்கு செல்வோம் என கலெக்டரிடம் குடுகுடுப்பைகாரர்களின் பிள்ளைகள் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்களிடம் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 5 ஆயிரத்து 156 மாணவர்கள் இடைநின்ற மாணவர்களாக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுடைய விவரங்கள் அனைத்தும் எமிஸ் (EMIS) இணையதளத்தில் உள்ள பொது தரவு தளத்தில் (Common Pool) வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களால் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு மேற்கொண்டதன் அடிப்படையில், 1001 மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டு, கல்வி பயின்று வருகிறார்கள்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம்பாளையம் புதூரில் 51 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்றனர். இவர்கள் குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று காலை நேரில் சென்றார்.
பெற்றோர்களை அழைத்தும், பள்ளி-மாணவிகளை இருக்கையில் அமர வைத்தும் அவர்கள் மத்தியில் நின்றபடி கலெக்டர் பேசினார்.
ஏன் பள்ளிக்கு செல்லாமல் நின்று விட்டீர்கள்? என கேட்ட கலெக்டரிடம் எங்களுக்கு சாதி சான்று தந்தால்தான் பள்ளிக்கு செல்வோம் என மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
அவர்களின் பெற்றோர்கள், இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தர்கள் உள்ளோம். எங்களுக்கு கணிகர் என எஸ்டி சாதிச்சான்று வழங்க கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை சான்று வழங்கப்படவில்லை. இதனால் வேலைவாய்ப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது தடைபட்டுள்ளதால் எங்கள் பிள்ளைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டோம் என தெரிவித்தனர்.
அப்போது ஒருவர் கலெக்டர் முன் குடுகுடுப்பை அடித்து சாதி சான்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கணிகர் என சான்று வழங்குவதற்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. எனவே குடு தாசிரி என்ற எம்பிசி சாதிச்சான்று மட்டுமே வழங்க இயலும் என கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார். கல்வி கற்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அதன்பிறகு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் ஒத்துக் கொண்டனர்.
இதை தொடர்ந்து பிள்ளைகளின் கைபிடித்து பள்ளிக்கு கலெக்டர் நடந்தே அழைத்துச் சென்றார். அப்போது சில மாணவர்கள் தமிழ்நாடு அரசின் ஜீப்பின் பக்கவாட்டு மற்றும் பின்புற படியிலும் ஏறி நின்று பள்ளிக்கு வந்தனர்.
புதூர் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்த்த பிறகு மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
இடைநின்ற 51 மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருகிறார்களா? என்பது குறித்து நாள்தோறும் ஆய்வு நடத்தப்படும். பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்பொழுது பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இம்மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் அனைவரையும் 100 சதவீதம் பள்ளியில் சேர்க்கும் பணி நிறைவடையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சீருடை, புத்தகங்களை பெற்ற பிறகு சிலர் பள்ளியிலிருந்து வெளியே முயன்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி வகுப்பறைக்கு அனுப்பினர்.
இடை நின்றவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வரும் கலெக்டர் பாஸ்கர பாண்டியனை கல்வியாளர்கள் பாராட்டி உள்ளனர்.
No comments