கத்தியால் வெட்டிய கைகளுக்கு மாவு கட்டு-போலீஸ் அதிரடி
கத்தியால் வெட்டிய கைகளுக்கு மாவு கட்டு-போலீஸ் அதிரடி
திருவண்ணாமலையில் காய்கறி வியாபாரியை கத்தியால் வெட்டியவர்கள் தப்பிச் சென்ற போது கீழே விழந்ததில் அவர்களது கை எலும்பு முறிந்தது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 4-வது தெருவை சேர்ந்தவர் ஷாருக்கான் (வயது 24). காய்கறி வியாபாரி. இவர் கடந்த 19ஆம் தேதி இரவு வேலையை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மண்டி தெரு மூங்கில் மண்டி அருகில் எதிரே மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் அவர் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதை ஷாருக்கான் தட்டி கேட்ட போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கெங்கை அம்மன் கோவில் அருகே நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஷாருக்கானை 2 மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஷாருக்கான், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அவர் திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்த உதயா, அம்பேத்கர் தெரு சேர்ந்த சஞ்சய், பேகோபுரத் தெருவைச் சேர்ந்த சுண்டு என்கிற சூர்யா, தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த சரண்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். புதுகார்கனாத் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் தலைமறைவானார்.
இந்நிலையில் போலீஸ் கைது செய்ய வந்தபோது சுண்டு என்கிற சூர்யாவும், உதயகுமாரும் தப்பியோட முயற்சித்ததாகவும், அப்போது அவர்கள் தவறி கீழே விழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த இரண்டு பேருக்கும் வலது கையில் மாவு கட்டு போடப்பட்ட படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதே போல் கடந்த மே மாதம் ஆயுதங்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய ரவுடிகளுக்கு போலீசார் மாவு கட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.
No comments