திமுகவின் முதல் எம்பி இரா.தர்மலிங்கம் நினைவு நாள்

திருவண்ணாமலையில், திமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்  இரா.தர்மலிங்கத்தின் 38வது நினைவு நாள் நகர திமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. 

திமுகவின் முதல் எம்பி இரா.தர்மலிங்கம் நினைவு நாள்

1949-ல் தொடங்கப்பட்ட திமுக, முதன்முதலாக 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்றது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இதில் சட்டமன்றத்துக்கு 15 பேரும், நாடாளுமன்றத்துக்கு 2 பேரும் தேர்வாகினர். அந்த 2 பேரில் ஒருவர் இரா.தர்மலிங்கம். திருவண்ணாமலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 

திமுக நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர். ப.உ.சண்முகமும், இரா.தர்மலிங்கமும் வட ஆற்காடு மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்குத் தூணாக நின்றவர்கள். 

திமுகவின் முதல் எம்பி இரா.தர்மலிங்கம் நினைவு நாள்

15 ஆண்டுகள் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டக் கழகத்தின் செயலாளர், 10 ஆண்டுகள் திருவண்ணாமலை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவர் போன்ற பதவிகளை வகித்து பெயர் பெற்ற இரா.தர்மலிங்கம், 1986-ஆம் ஆண்டு மறைந்தார்.

திருவண்ணாமலை, திருவள்ளுவர் சிலை அருகில், நடைபெற்ற இரா.தர்மலிங்கத்தின் 38வது நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். கல்பனாசம்பத், மீனாவிநாயகம், ஆ.கல்யாணசுந்தரம், ஆ.பழனி, அ.மோகன், மா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திமுகவின் முதல் எம்பி இரா.தர்மலிங்கம் நினைவு நாள்

இரா.தர்மலிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து 250 பெண்களுக்கு சேலைகளையும், 1000 பேருக்கு அன்னதானத்தையும் கு.பிச்சாண்டி வழங்கினார். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தினேஷ்சம்பத் செய்திருந்தார். 

---------------------------------