தேரில் உட்கார வைக்கப்பட்ட ஸ்தபதி-பக்தர்கள் எதிர்ப்பு
தேரில் உட்கார வைக்கப்பட்ட ஸ்தபதி-பக்தர்கள் எதிர்ப்பு
திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணாமலையார் தேர் வெள்ளோட்டத்தின் போது சாமி வைக்கப்படும் இடத்தில் ஸ்தபதி உட்கார வைக்கப்பட்டிருப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 4-ந் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றமும், 10-ம் தேதி தேரோட்டமும், 13-ம் தேதி மகாதீபமும் நடைபெறுகிறது.
தேரோட்டத்திற்காக 59 அடி உயரம், 200 டன் எடை கொண்ட பெரிய தேரான அண்ணாமலையார் தேர், ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 203 சிற்பங்கள், புதியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா, துவாரபாலகர் சிலைகள் புதுப்பிக்கப்பட்டு;ள்ளன.
புதுப்பிக்கும் பணி முடிவடைந்ததால் பெரிய தேர் இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இதற்காக அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட கலசம் சிவவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. பிறகு தேரில் உள்ள சிற்பங்கள், சிலைகள், சக்கரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு 8.15 மணியளவில் வெள்ளோட்டம் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' பக்தி முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிலையில் தேரில் உற்சவர் வைக்கப்படும் மேல் தளத்தில் கழுத்தில் மாலை, தலைப்பாகையுடன் ஸ்தபதி உட்கார வைக்கப்பட்டிருந்தார். இதைப்பார்த்த பக்தர்கள் முருகர் தேர் வெள்ளோட்டத்தில் கூட இப்படி ஸ்தபதி உட்கார வைக்கப்படவில்லை. விதிமுறைக்கு மாறாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் நடந்து கொள்ள கூடாது என ஆதங்கப்பட்டனர். அதே போல் தேர் முன் பரதநாட்டிய குழுவினருக்கு அனுமதி அளிக்கபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளோட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், வேலூர் சரக டிஜஜி ஜெயராணி, திருவண்ணாமலை எஸ்.பி. சுதாகர், மேயர் நிர்மலாவேல்மாறன், அறங்காவலர்குழு தலைவர் இரா.ஜீவானந்தம், எ.வ.வே.கம்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாட வீதியில் பவனி வந்த தேர் 4 மணி நேரத்தில் நிலையை வந்தடைந்தது. வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
No comments