கிராமத்தில் பிறந்த எனக்குத்தான் ரேஷன் கடையை பற்றி தெரியும்
பிச்சாண்டி, ஸ்ரீதர் போன்றவர்கள் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமத்தில் பிறந்த எனக்குத்தான் ரேஷன் கடையை பற்றி தெரியும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறையின் சார்பில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
விழாவை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.10.1901 முதல் மத்திய கூட்டுறவு வங்கி 37 கிளைகளுடன் செயல்பட தொடங்கியது. 798 கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. நமது மாவட்டத்தில் 1692 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் அளவிற்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடியும் , 13 லட்சத்து 12 ஆயிரம் உறுப்பினர்களுக்கு 6000 கோடி ரூபாய் நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 2023 -24 ஆம் ஆண்டில் பயிர்கடன்கள், மத்திய கடன்கள், மகளிர் சுய உதவிகடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற் கடன் 3 லட்சத்து 41 ஆயிரத்து 967 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 743 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு, விவசாயிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் உதவிகளை வழங்குகிற அரசாக இருக்கிறது.
கழகம் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் கூட்டுறவுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறோம். கூட்டுறவு இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம். அத்தனை உதவிகளையும் கழக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சிக்கு அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டாமா? ஒரு ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கி தருவது உங்கள் கையில் தான் உள்ளது.
நான் உணவு துறை அமைச்சராக இருந்த 23 சீர்திருத்தங்களை கொண்டு வந்தேன். சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதி அரசர்கள், தமிழ்நாட்டில் உள்ள பொது விநியோகத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சொன்னதோடு என்னையும், முதலமைச்சரையும் பாராட்டினார்கள். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
எங்கேயோ கிராமத்தில் நான் பிறந்ததால்தான் ரேஷன் கடையை பற்றி நான் அதிகமாக உணர்ந்திருக்கிறேன். பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு இதெல்லாம் புரியுமா? இங்கு இருக்கிற பன்னீர் செல்வம், ஸ்ரீதர், பிச்சாண்டி பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.
திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு கிராமத்தில் விவசாய வீட்டுப் பிள்ளையாக பிறந்த என்னைப் போன்றவர்களுத்தான் மேடு பள்ளங்கள் தெரிவதற்கு வாய்ப்பு உண்டு. அனுபவம் உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் எ.வ.வேலு ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து, ரூ.13 கோடியே 67 லட்சம் மதிப்பில் 1885 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், ரூ.45 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்டு உள்ள வேளாண் எந்திரங்களை கூட்டுறவு நிறுவனத்திற்கும் வழங்கினார்.
மேலும் சிறப்பாக பணியாற்றி கூட்டுறவு சங்கங்களுக்கும், நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.
விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments