அண்ணாமலையார் கோயிலுக்கு 100 பேர் பாதயாத்திரை
அண்ணாமலையார் கோயிலுக்கு 100 பேர் பாதயாத்திரை
சிவபெருமான், பார்வதி வேடமிட்டும், சிவவாத்தியம் முழங்கவும் ஆரணியிலிருந்து வந்தனர்.
ஆரணியிலிருந்து, திருவண்ணாமலைக்கு 100 பேர் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்தனர்.
சைவத் திருத்தலங்கள் சிறப்பு பெற்ற திருவண்ணாமலை உலகின் மிகச்சிறந்த சிவத்தலங்ககளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பெரும்பான்மையான மக்களால் வழிபடுவதும் புராண, இதிகாச பின்னணிகளை கொண்டிருப்பதும், தனி சிறப்புகளை உள்ளடக்கியதுமாக இறைவன் உறையும் திருத்தலமாக திருவண்ணாமலை விளங்கி வருகிறது.
அண்ணாமலையாரை வணங்குவதால் அளவற்ற அருள் கிடைக்கும், வாழ்வில் அமைதி நிலவும், பாவம் தீரும், வேண்டுதல் நிறைவேறும், நோய் நீங்கும் என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருவண்ணாமலையை நாடி வருகின்றனர். நடந்து செல்வதோடு மட்டுமன்றி அங்கபிரதட்சணமும் செய்கின்றனர்.
சமயாச்சாரியார்களான நால்வர் காலத்தில் இருந்து சிவனடியார்கள் திருவண்ணாமலையிலிருந்து நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். அதனால்தான் ஆண்டிகள் மிகுந்தது திருவண்ணாமலை என்ற முது மொழியும் தோன்றியது. பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்து, இந்த அடியார்கள் அண்ணாமலையாரை வணங்கி கிரிவலத்தை முடித்துக் கொண்டு அதன் பிறகு ஒவ்வொரு ஊராகச் சென்று சமய ஒழுக்கத்தை பொதுமக்களுக்கு போதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இக்காலத்தில் அந்த நடைமுறை இல்லை என்றாலும் திருவண்ணாமலையை நோக்கி பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் பாதையாத்திரையாக வந்து அண்ணாமலையாரை வணங்கிச் செல்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் பழனி, திருத்தணி போன்ற முருகன் கோயில்களுக்கு தைப்பூசத்துக்கு பல பகுதிகளில் இருந்து பாதயாத்திரை போகும் பழக்கம் உள்ளது. திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து இன்றைக்கும் பல கிராம மக்கள் புரட்டாசி மாதம் திருப்பதிக்கு நடைபயணம் செய்கின்றனர். அந்த வரிசையில் அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது அதிகரித்து வருகிறது.
18 ஆண்டுகளாக திண்டிவனத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஒன்று கூடும் சிவனடியார்கள் 69 கிலோமீட்டர் தூரம் திருமுறைகளை ஓதியபடி பாதயாத்திரையாக திருவண்ணாமலை வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
இதே போன்று ஆரணியில் இருந்து 100க்கு மேற்பட்ட சிவனடியார்கள் கடந்த இரண்டு வருடங்களாக திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை வருகின்றனர். இந்த வருடம் மூன்றாவது ஆண்டாக பாதயாத்திரை வந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி அவர்கள் அண்ணாமலையாருக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையை தொடங்கினர்.
ஆரணி பூமிநாதர் கோயிலில் இருந்து அவர்கள் சிவவாத்தியம் முழங்கவும், சிவபெருமான், பார்வதி வேடமணிந்தும் திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
வழியில் அவர்களுக்கு பொதுமக்கள் குடி தண்ணீர், உணவு வழங்கி உபசரித்தனர். இரவு குருவிமலை கரைகண்டேஸ்வரர் கோயிலில் தங்கி மறுநாள் அதிகாலை எழுந்து நீராடி மீண்டும் நடைபயணத்தை துவக்கினர். ஓம் நமச்சிவாயா மந்திரம் ஓதியபடியும், சிவ வாத்தியங்கள் முழங்கவும் 64 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அவர்கள் அண்ணாமலையார் கோயிலை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அண்ணாமலையாரையும், உண்ணாமலை அம்மனையும் தரிசித்தனர்.
இதுகுறித்து ஆரணியைச் சேர்ந்த சரவணன் என்ற சிவனடியார் கூறுகையில், ஆரம்பத்தில் 20, 30 பேர்தான் பாதையாத்திரையாக வந்தோம். அதன் பிறகு சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் எங்களுடன் இணைந்து கொண்டு வர ஆரம்பித்தனர். அது இன்றைக்கு 100 தாண்டி இருக்கிறது. வழிபடுவோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதுடன், உயர்ந்த நிலையையும் அளிப்பவர் அண்ணாமலையார். சிவ பூஜையும், சிவ சிந்தனையும் மக்களை நல்வழிப்படுத்துகிறது. எனவே உலக நன்மைக்காகவும், துன்பம், துயரம் நீங்கி வளம் கூடவும் பாதயாத்திரையாக வந்து அண்ணாமலையாரை தரிசித்து சென்றோம் என்றார்.
---------------------------------------
No comments