திருவண்ணாமலை கலெக்டருக்கு கவர்னர் பாராட்டு
முன்னாள் படைவீரர்கள் கொடி நாள் நிதியை இலக்கை விட அதிகமாக வசூல் செய்ததற்காக திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியனை கவர்னர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த காலத்தில் முன்னாள் படைவீரர் கொடி நாள் 2020-21ஆம் ஆண்டிற்கான கொடி நாள் நிதியாக ரூ.27 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விட அவர் 173 சதவீதம் அதிகரித்து ரூ.46 லட்சத்து 71 ஆயிரத்து 495-ஐ வசூலித்திருந்தார்.
அதே போல் 2021-22ஆம் ஆண்டு கொடி நாள் நிதியாக ரூ.49 லட்சத்து 5 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விட 193 சதவீதம் அதிகரித்து ரூ.94 லட்சத்து 57 ஆயிரத்து 100 வசூலித்திருந்தார்.
இலக்கை விட அதிகமாக கொடி நாள் நிதி வசூல் செய்த கலெக்டர் பாஸ்கர பாண்டியனை பாராட்டும் விதமாக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழை வழங்கியிருக்கிறார்.
அந்த பாராட்டுச் சான்றிதழினை கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அ.வெ.சுரேஷ் நாராயணன் வழங்கினார்.
கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ந் தேதியை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக் கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதியை படை வீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
No comments