ஆம்புலன்சில் உடல்-3 மணி நேரம் கலெக்டர் பேச்சு வார்த்தை
திருவண்ணாமலை அடுத்த தேவனாம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டதாக கூறியும், கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரியும் அவரது உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டை சேர்ந்த ஏழுமலை மகன் இளங்கோவன் வயது (32) கடந்த 30ந் தேதி இவர் ஊருக்கு அருகில் உள்ள காப்பு காட்டில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 2ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இளங்கோவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டனர், கொலை செய்தவர்களை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என அவரது உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இளங்கோவன் உடல் 4 நாட்களாக ஆம்புலன்சிலேயே இருந்து வருகிறது.
மாவட்ட வருவாய் அதிகாரி ராமபிரதீபன், ஏடிஎஸ்பி பழனி ஆகியோர் தேவனாம்பட்டிற்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ப.வளர்மதி, செல்வம், பகலவன், அம்பேத்வளவன் மற்றும் இளங்கோவின் உறவினர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் இன்று பகல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு வாயில் முன்பு அவர்கள் கண்டன கோஷங்கள் முழுங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இளங்கோவனின் உறவினர்கள் 20 பேரை வரவழைத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) ஸ்ரேயாகுப்தா, மாவட்ட வருவாய் அதிகாரி ராமபிரதீபன், ஏடிஎஸ்பி பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இளங்கோவன் இறப்பை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தவர்களிடம் விடுதலை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை அடக்கம் செய்யக் கூடாது என கூறி போராட்டம் நடத்தியவர்கள் தேவனாம்பட்டிற்கு திரும்பி சென்றனர்.
இதனால் நாளையும் இளங்கோவன் உடல் பெறப்பட்டு அடக்கம் செய்யப்படுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. உடலை பதப்படுத்தும் உபகரணங்கள் இன்றி 4 நாட்களாக உடல் ஆம்புலன்சிலேயே இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இது சம்மந்தமாக சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments