திருவண்ணாமலையில் பஸ் டயரில் சிக்கி வாலிபர் சாவு
திருவண்ணாமலையில் பஸ் டயரில் சிக்கி வாலிபர் சாவு
பஸ் நிலையம் அருகே பைக்கில் சென்ற போது பரிதாபம்
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி இறந்தார்.
இது பற்றிய விவரம் வருமாறு,
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகே பைக்கில் சென்ற வாலிபர் ஒருவர் அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி ரத்தவெள்ளத்தில் ரோட்டில் கிடந்தார். மூளை வெளியே சிதறிய நிலையில் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்தவர் பெயர் பிரகாஷ்(வயது 35). தந்தை பெயர் பாண்டுரங்கன். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள தென்கரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இன்று இரவு 8 மணி அளவில் பிரகாஷ், பல்சர் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ரவுண்டாவை தாண்டி சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. திருக்கோயிலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பஸ்சின் பின் சக்கரத்தில் அவரது தலை சிக்கியுள்ளது.
இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அமைந்திருக்கிற சின்னகடைத் தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் திண்டாடி வருகின்றனர். போதிய போலீசார் பணியில் இல்லாதது, சிக்னல் இயங்காதது, நெரிசல் மிகுந்த பகுதிகளை ஒரு வழிப்பாதையாக மாற்றாதது போன்றவைகள் இந்த கடும் நெரிசலுக்கு காரணம் என்றும், அதனாலேயே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
No comments