அரசு கல்லூரியில் 9 பாம்புகள் பிடிபட்டன
அரசு கல்லூரியில் 9 பாம்புகள் பிடிபட்டன
பாம்புகள் இருந்த கழிவறை பயன்பாட்டில் இல்லாதது என மாவட்ட நிர்வாகம் விளக்கம்
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 9 பாம்புகள் பிடிக்கப்பட்டதாகவும்,பாம்புகள் இருந்த கழிவறை பயன்பாட்டில் இல்லாதது எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் கல்லூரி கழிவறை அருகே 6 அடி உயரத்திற்கு மேல் புதர்கள் நீண்டு மண்டி கிடக்கிறது. இவற்றில் பாம்புகள் குடியிருந்து வருவதால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மாணவ-மாணவியர் கழிவறைக்கு செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் கழிவறையில் பாம்புகள் நெளிந்ததை பார்த்து மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதைக் கேள்விப்பட்டதும் கொதித்தெழுந்த பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 30.08.2024 அன்று வேதியியல் துறை கட்டிடத்தில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத ஒரு மாணவியர் கழிவறையில் ஒரு பெரிய பாம்பு மற்றும் 8 சிறிய பாம்புகள் இருந்ததை கண்டு கல்லூரி மாணவியர்கள் முதல்வரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, அன்றையதினமே தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் அக்கழிவறையிலிருந்த பாம்புகள் அனைத்தும் முழுமையாக பிடிக்கப்பட்டன.
03.09.2024 அன்று பாம்பு பிடிக்கும் தொழிலாளர்களை கொண்டு, கல்லூரி வளாகம் முழுவதும் பாம்புகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இன்றைய தினமும் பாம்பு பிடி தொழிலாளர்கள் மூலம் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக மாணக்கர்களுக்கோ அல்லது பணியாளர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும், பொதுப்பணித்துறையினரால் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஏதேனும் பாம்புகள் உள்ளதா என தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர்கள் மூலமாகவும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments