அந்த அமைச்சர் மீது எனக்கு வருத்தம்- எ.வ.வேலு கூறுகிறார்

அந்த அமைச்சர் மீது எனக்கு வருத்தம்- எ.வ.வேலு கூறுகிறார்

💥தொகுதி மக்களை சந்திக்க முடியவில்லையே என மனசாட்சி உறுத்துவதாக கோடை விழாவை துவக்கி வைத்து பேச்சு 

💥ஜூன் மாதம் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 15½ கோடி மக்கள் வந்ததாக சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்  

ஜவ்வாதுமலை கோடை விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் மீது தனக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொகுதி மக்களை சந்திக்க முடியவில்லையே என்று மனசாட்சி உறுத்துவதாகவும் கூறினார். 

அந்த அமைச்சர் மீது எனக்கு வருத்தம்- எ.வ.வேலு கூறுகிறார்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் 24ம் ஆண்டு கோடை விழா இன்று தொடங்கி நாளை வரை நடக்கிறது. தொடக்க விழாவிற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். 

விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவில் 7202 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 54 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

விழாவில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையத்தின் ஆணையர் சி.சமயமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, 

மலைகளுக்கெல்லாம் ராணியாக இருப்பது ஊட்டி. ஊட்டியின் மண்ணில் பிறந்து சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ராமச்சந்திரன் சுற்றுலாத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பொருத்தமானதாகும். ஆனால் அவர் மீது எனக்கு வருத்தம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  சிறப்பான சுற்றுலா அமைச்சராகத்தான் இருக்கிறார். முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றுகிற அமைச்சராக இருக்கிறார். 

ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக இருக்கிற இந்த ஜவ்வாதுமலைக்கு உங்கள் கடை கண்ணை திறந்தால் இன்னும் நான் உங்களை அதிகமாக பாராட்டுவேன். இந்த ஆண்டு சுற்றுலா துறையின் மூலமாக ஒதுக்கப்படுகிற பணத்தில் பெரும்பங்கு ஜவ்வாதுமலைக்கு நீங்கள் ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

அந்த அமைச்சர் மீது எனக்கு வருத்தம்- எ.வ.வேலு கூறுகிறார்

ஓட்டு போட்ட ஜனங்களை மாதத்திற்கு இரண்டு முறையாவது வந்து பார்க்காமல் இருக்கிறாரே என இங்கு இருக்கிற பன்னீர் யோசனை செய்கிறார். என்ன செய்வது எனக்கு இருக்கின்ற பணியால் முடியவில்லை. மு.பெ.கிரியும், அம்பேத்குமாரும், சரவணனும் தொகுதியை சுற்றி சுற்றி வருகிறார்கள். அவர்களை எல்லாம் ஈடு செய்கிறபோது நான் அவர்களுக்கு கால் பகுதி கூட பணியாற்றவில்லை என்று மனசாட்சி உறுத்துகிறது. பிச்சாண்டி பற்றி சொல்ல வேண்டியது இல்லை. யார் பத்திரிகை கொடுத்தாலும் முதல்ல போகிற ஆளாகத்தான் அவர் இருப்பார். 

மின்சாரம் இல்லாத இப்பகுதிக்கு முதல் முதலாக மின்சாரத்தை கொண்டு வந்தவர் பெ.சு.திருவேங்கடம். நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது இங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அந்த சமயத்தில் அவசரமாக நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ள செல்லை எடுத்த போது சிக்னல் இல்லை. காவல் நிலையத்திற்கு சென்று தான் பேச வேண்டிய நிலை இருந்தது. 

அந்த அமைச்சர் மீது எனக்கு வருத்தம்- எ.வ.வேலு கூறுகிறார்
சாலை விரிவாக்க பணி ஆய்வு 

அன்று மத்திய தொலைதொடர்பு அமைச்சராக இருந்த ஆர்.ராசாவை தொடர்பு கொண்டு ஒரு வார காலத்தில் செல்போன் டவர் வைக்கவில்லை என்றால் உன்னிடம் பேச மாட்டேன் என்று உரிமையோடு சொன்னேன். ஒரு வார காலத்தில் வேலூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து இங்கு வந்து செல்போன் டவர் அமைத்தார்கள். திமுக ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. இப்படி கழக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால்தான் கோரிக்கை நாயகன் சரவணன் எம்எல்ஏ இன்று கோரிக்கையை வைத்தார். கோரிக்கை வைக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது.

இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்தின் பேசினார். அவர் பேசியதாவது, 

ஜவ்வாது மலையில் வருங்காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என்றும், இம்மலைத் தொடரில் புகழ்பெற்ற பருவதமலை, கோட்டை வரதர் கோயில் அமைந்துள்ளது. இம்மலையில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் வேளாண்மையை முக்கிய தொழிலாக கொண்டு பழங்கள், வரகு, தேன், சாமை, திணை, கடுக்காய் போன்ற வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த வருடத்தில் சுமார் 87 லட்சத்து 91 ஆயிரம் பயணிகள் சுற்றுலா பயணமாக வருகை புரிந்துள்ளனர். சுற்றுலாத்துறை மூலமாக அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. ஜீன் மாதம் மட்டும் 15 கோடியே 55 லட்சம் பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். வருடந்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Post Previous Post

No comments