மலை மீது ஆக்கிரமிப்பு-காலில் விழுந்து பெண்கள் கோரிக்கை
மலை மீது ஆக்கிரமிப்பு-காலில் விழுந்து பெண்கள் கோரிக்கை
ஐகோர்ட்டு நியமித்த வழக்கறிஞர் திருவண்ணாமலை மலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு-ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று மனு
திருவண்ணாமலை மலை மீது உள்ள சட்டவிரோதமான கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு இன்று ஆய்வை நடத்தியது. அப்போது ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மலை மீது கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்தி, அவற்றுக்கான குடிநீர், மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மலையே சிவன்தான், அங்கு எப்படி கழிப்பிடங்கள், செப்டிக் டேங்க்குகள் கட்டலாம்? என கேள்வி எழுப்பி வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து மலையில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வழக்கறிஞர் எம்.சி.சுவாமி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறையினர் இன்று முற்பகல் பச்சையம்மன் கோயில் பகுதியிலிருந்து ஆய்வை தொடங்கினர். ஒரு கட்டத்தில் மலை மீது சிறிது தூரம் ஏறி ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.
காலில் விழுந்த மூதாட்டி |
கவலைப்படாதீங்க-கலெக்டர் ஆறுதல் |
மலையை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வழக்கறிஞர் எம்.சி.சுவாமி, கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் வரிசையில் நின்று மனு அளித்தனர். சில பெண்கள் அவர்களது காலில் விழுந்து 'நீதான் சாமி வழிகாட்டணும்' என கோரிக்கை வைத்தனர். அவர்களிடையே பேசிய கலெக்டர் தமிழக அரசு நல்லதுதான் செய்யும், கவலைப்படாதீர்கள் என்றார்.
இப்பகுதியில் 50 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு இந்த வீட்டை தவிர வேறு இடம் இல்லை. எனவே எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், மனுவோடு சேர்த்து ரேஷன், ஆதார் கார்டு, வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, வாக்காளர் அட்டை, மின் கட்டண இணைப்பு அட்டை, கேஸ் இணைப்பு பில் ஆகியவற்றை இணைத்து வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து இக்குழு அக்னிலிங்கம் பகுதியிலுள்ள பாண்டேஸ்வரர் கோவில், பாண்டவ தீர்த்த குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வை நடத்தியது. அந்த பகுதியிலும் ஏராளமான பெண்கள் திரண்டு அவர்களிடம் மனுவை அளித்தனர். 30 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை இணை ஆணையர் அரங்க.சுதர்சன், மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) குருசாமி, தபேலா நகராட்சி ஆணையர் ந.தட்சணாமூர்த்தி, தாசில்தார் மு.தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இக்குழுவிடம் நகரமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதேவிபழனி, க.பிரகாஷ், எஸ்.நரேஷ் ஏ.கோவிந்தன், ஆகியோரது தலைமையில் பொதுமக்கள் வந்து மனுக்களை அளித்தனர்.
இதுவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 583 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கணக்கெடுக்கப்பட உள்ளதாகவும் வருவாய்த்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments