50 பேருக்கு இருளர் சான்று-சிறப்பு முகாமில் உடனடி தீர்வு
50 பேருக்கு இருளர் சான்று-சிறப்பு முகாமில் உடனடி தீர்வு
திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் நடந்த பழங்குடியினருக்கான சிறப்பு முகாமில் 50 பேருக்கு இருளர் சான்று உடனடியாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை வட்டம், தென்மாத்தூர் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதத்தில் சிறப்பு முகாம் இன்று காலை நடத்தப்பட்டது.
கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளான சாதிச் சான்றிதழ், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை, ஆதார் அட்டைகள், பட்டாக்கள், வங்கிகளில் கணக்குகள் தொடங்கி வைத்தல், நூறு நாள் வேலைக்கான பணி ஆணை வழங்குதல் போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயன்பெறும் வகையில் முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்குவதற்க்கான பரிந்துரைகளை செய்து வருகிறோம். மேலும் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும் நேரடியாக ஒவ்வொரு பள்ளிக்கு சென்று சாதி சான்றிதழ் பெறாத மாணவர்களின் பட்டியலை பெற்று, அவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள பழங்குடியினர் வாழ் பகுதிகளில் 4 முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதே போன்று ஆரணி, செய்யாறு கோட்டம் என ஒவ்வொரு கோட்டத்திற்கும் தனியாக நடைபெற்று வருகிறது.
சாதி சான்றிதழ் பெறாத பழங்குடியின மக்கள் சிறுவர்களாயிருந்தாலும், பெரியவர்களாயிருந்தாலும் தங்களது மனுக்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் வங்கிக்கடன் பெற்றுக்கொள்வது குறித்த ஆலோசனைகளை தர மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாட்கோ சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வாக இருளர் சாதிச்சான்று 50 நபர்களுக்கும், மருத்துவக் காப்பீடு அட்டை 22 பயனாளிகளுக்கும், கறவை மாடு லோன் 38 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனை 16 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
மேலும் தெரு விளக்கு வேண்டி 2 மனுக்கள், ஆதார் திருத்தம் வேண்டி பெறப்பட்ட 5 மனுகள் என மொத்தம் 133 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.அம்சாகண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
No comments