திருவண்ணாமலையில் போலி டாக்டர் மணி கைது
திருவண்ணாமலையில் போலி டாக்டர் மணி கைது
திருவண்ணாமலை துராபலி தெருவில் ஆங்கில மருத்துவம் பார்த்த மணி என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் போலி மருத்துவர்களை கண்டறிய மருத்துவ துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கடந்த ஓராண்டுகளில் 90க்கும் மேற்பட்ட புகார்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் மீது தவறுகள் உறுதிப்படுத்தப்பட்டு வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை தூராபலி தெருவில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மணி என்பவர் நோயாளிகளுக்கு அலோபதி வைத்தியம் செய்து வருவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நலப்பணி இணை இயக்குநர் தலைமையின் கீழ் செய்யார் அரசு தலைமை மருத்துவமனையில் ECR பிரிவில் பணிபுரியும் மருந்தாளுனர், இணை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் மற்றும் திருவண்ணாமலை நகர கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக் குழுவிற்கு போலி டாக்டர் மணி, ஒரு நோயாளிக்கு ஆங்கில மருந்து கொண்ட ஊசியினை செலுத்தியதும், ஆங்கில மருத்துவம் செய்து வந்ததற்கான ஆதாரமும் கிடைத்தது.
இதை தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலி டாக்டர் மணி கைது செய்யப்பட்டார்.
கிராமப்புறங்கள் அதிகம் நிறைந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவையான சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள், அனைவரும் விழிப்புணர்வுடன் மருத்துவம் பயின்ற மருத்துவர்களிடத்தில் மட்டும் சிகிச்சைப் பெற அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments