திருவண்ணாமலை அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
திருவண்ணாமலை அதிமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு
ஆள் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது
திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரை கடத்தி வந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக ஒன்றிய செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கம் வட்டம் மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பி.குணசீலன்(வயது 48). இவரது மனைவி தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். எல்ஐசி ஏஜெண்டாக இருந்து வந்த குணசீலன் பின்பு சென்னைக்கு சென்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
திருவண்ணாமலை அருகே உள்ள வேடியப்பனூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனும், குணசீலனும் கல்லூரி ஒன்றில் படிக்கும் போது நண்பர்கள் ஆனார்கள். இந்த பழக்கத்தின் அடிப்படையில் கோபாலகிருஷ்ணனிடம், குணசீலன் ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியிருந்தாராம். இதில் ரூ.50 ஆயிரத்தை திருப்பி தந்து விட்டாராம். மீதி பணத்தை கொடுக்காமல் குணசீலன் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அவர்களிடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று குணசீலனை சென்னையில் இருந்து வாகனம் மூலம் வலுக்கட்டாயமாக கடத்தி வந்து திருவண்ணாமலை எழில் நகரில் உள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணனுக்கு சொந்தமான செங்கல் சூளையிலும், பிறகு கலர் கொட்டாய் அருகில் உள்ள ஒரு நிலத்திலும் தங்க வைத்தார்களாம்.
இதற்கிடையில் குணசீலனின் தங்கை ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தினாராம். ஆனால் மேலும் பணம் கேட்டு காஞ்சி ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் குணசீலனை அடைத்து வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.
இது சம்மந்தமாக குணசீலன் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், ஆடையூரைச் சேர்ந்த நேரு, காம்பட்டைச் சேர்ந்த சபரி, கலர்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments