வாரிசு சான்றுக்கு லஞ்சம்-பெண் ஆர்.ஐ. கைது
வாரிசு சான்றுக்கு லஞ்சம்-பெண் ஆர்.ஐ. கைது
வாரிசு சான்றுக்கு ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் ஆர்.ஐ-யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டம் மேல்நாச்சிப்பட்டு வடக்கு தெருவில் வசித்து வருபவர் பழனிச்சாமி(வயது 62). மரவேலை செய்து வருகிறார். இவரது தந்தை ஆறுமுகத்திற்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. 2வது மனைவிக்கு பிறந்தவர்கள் பழனிச்சாமி. ராஜேஸ்வரி.
ஆறுமுகத்தின் மனைவிகள் 2 பேரும் இறந்து விட்டதால் பூர்விக சொத்தான 1 ஏக்கர் நிலத்தை பாகபிரிவினை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக வாரிசு சான்று கேட்டு பழனிச்சாமி இ.சேவை மையம் மூலம் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தார். அந்த மனுவை வருவாய் ஆய்வாளர்(ஆர்.ஐ) பாரதி நிராகரித்தார். இதையடுத்து மேலும் 3 முறை விண்ணப்பித்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பழனிச்சாமி ஆர்.ஐ பாரதியை சந்தித்து மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கேட்டார். அதற்கு பாரதி இ.சேவை மையத்தில் விண்ணப்பித்தால் போதுமா? 1000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தால்தான் வாரிசு சான்றுக்கு பரிந்துரை செய்வேன் என கறாராக சொல்லி விட்டாராம்.
இந்நிலையில் 5வது முறையாக வாரிசு சான்றுக்காக பழனிச்சாமி இ.சேவை மையம் மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து ஆர்.ஐ. பாரதி மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது லஞ்ச பணம் 1000 ரூபாய் வராவிட்டால் மீண்டும் மனுவை நிராகரித்து விடுவேன் என சொல்லி விட்டு சென்று விட்டாராம்.
இது குறித்து பழனிச்சாமி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ஆர்.ஐ. பாரதியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
பழனிச்சாமி ஆர்.ஐ குடியிருப்புக்கு சென்று பாரதியிடம் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ஆர்.ஐ பாரதியை கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நேற்று சிட்டா அடங்கல் தர மறுத்ததால் விஏஓ அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்த நிலையில் வாரிசு சான்றுக்காக 4 மாதமாக தொழிலாளியை அலையவிட்டு லஞ்சம் வாங்கிய பெண் ஆர்.ஐ இன்று கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments