அலைக்கழித்த விஏஓ-தீக்குளித்த விவசாயி
அலைக்கழித்த விஏஓ-தீக்குளித்த விவசாயி
பெட்ரோல் வைத்து தீ வைத்துக் கொண்டதால் உடல் கருகிய பரிதாபம்- மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருவண்ணாமலை அருகே விஏஓ அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தன் உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் தொகுதி மஷார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது.35) விவசாயி. கற்பூரம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் தேவனாம்பட்டு அருகே ஊதிரம்பூண்டியில் உள்ளது. இதற்கு சிட்டா அடங்கல் கேட்டு ராமகிருஷ்ணன், தேவனாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் காந்தியிடம் விண்ணப்பித்திருந்தாராம். பல முறை நடந்தும் அவருக்கு சிட்டா அடங்கல் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இன்று ராமசாமி என்பவரை அனுப்பி சிட்டா அடங்கலை வாங்கி வருமாறு கூறினாராம். அவர் விஏஓ அலுவலகத்திற்கு சென்று திரும்பி வந்து சிட்டா அடங்கல் தரவில்லை என கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன் விஏஓ அலுவகத்திற்கு சென்றார். அலுவலகத்தில் விஏஓ காந்தி மற்றும் அவரது உதவியாளர்கள் இருந்தனர்.
நேரிடையாக சென்று கேட்டும் சிட்டா அடங்கல் கிடைக்காததால் விஏஓ அலுவலகத்திற்கு முன், கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராமகிருஷ்ணன் தன் உடம்பின் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து பதறிய அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ராமகிருஷ்ணன், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஏஓ அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments