ஆர்.ஐ., வி.ஏ.ஓவுக்கு கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொறுப்பு
ஆர்.ஐ., வி.ஏ.ஓவுக்கு கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொறுப்பு
தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை - மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடி- கலெக்டர் தகவல்
ஆர்.ஐ-யும், வி.ஏ.ஓ-வும் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலாளர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் பேரில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கள்ளச் சாராயம் குறித்த புகார்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்கள் கட்டணமில்லா எண் 10581 என்ற எண்ணிற்கும், 89394 73233 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் அளவில் குழு அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை, கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் இடங்களை கண்காணித்தும் மற்றும் பொது மக்களிடமிருந்து ஏதாவது புகார் வரப்பெற்றால் உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.
தொழிற்சாலை சார்ந்த இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், ஜமுனாமரத்தூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
காவல் துறையினருடன் வருவாய்த்துறை இணைந்து கூட்டு ஆய்வு செய்து கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் கடத்தலை தடுக்க மாவட்ட எல்லைகளின் சோதனை சாவடிகளை அமைக்க வேண்டும். மதுபானம் சில்லறை விற்பனை கடைகளில் குறைவாக விற்பனை உள்ள இடங்களை கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை ஏதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ள பகுதிகளில் கள்ளசாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகிப்பதை தடுக்க தொடர் களஆய்வு மேற்கொள்ளவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராய குற்றங்கள் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, செய்யார் சப்-கலெக்டர் பல்லவி வர்மா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவதாஸ், உதவி வன பாதுகாவலர் வினோத் குமார், கலால் உதவி ஆணையர் செந்தில் குமார், மதுவிலக்கு டிஎஸ்பி ரமேஷ், கோட்டாட்சியர்கள் ஆர்.மந்தாகினி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments