பொதுப்பணித்துறையாக இருந்திருந்தால்...எ.வ.வேலு கடுப்பு

பொதுப்பணித்துறையாக இருந்திருந்தால்...அமைச்சர் எ.வ.வேலு கடுப்பு 

ஆமை வேகத்தில் மார்க்கெட் கட்டும் பணி- ஒப்பந்ததாரிடம் கிடுக்குப்பிடி கேள்வி 

இறைச்சி விற்பனைக்கு 40 கடைகள் ஒதுக்கீடு

புதிய பஸ் நிலையத்திற்கு இணைப்பு பாலம் வேண்டாம் என முடிவு 

திருவண்ணாமலையில் புதிய மார்க்கெட் கட்டும் பணி தாமதமாக நடைபெற்று வருவதை பார்த்த அமைச்சர் எ.வ.வேலு எனது துறையாக இருந்தால் பிழிந்தெடுத்திருப்பேன் என சொன்னதோடு  அதிகாரிகள், ஒப்பந்ததாரிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டார். 

பொதுப்பணித்துறையாக இருந்திருந்தால்...எ.வ.வேலு கடுப்பு

திருவண்ணாமலை கடலைகடை மூலையில் நகராட்சி தெரு மற்றும் சாலை ஓரங்களில் காய்கறி கடைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தேரடி வீதியில் பூக்கடைகள் செயல்பட்டு வரும் ஜோதி மார்க்கெட்டும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அந்த மார்க்கெட் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. திருவிழாக் காலங்களில் அதிக மக்கள் தொகையால் பெரும் இட நெருக்கடியும், மிகுந்த போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.                

எனவே. இந்நகரின் மையப் பகுதியில் பொது மக்கள் எளிதாக அணுகக்கூடிய இடமாகவும் நகராட்சிக்கு சொந்தமான இடமாகவும் உள்ள காந்தி நகரில் 2.67 ஏக்கர் காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த காய்கறிச்சந்தை, பூச்சந்தை, பழக்கடைகள் ரூ. 29 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. 

தரைத்தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகள், முதல் தளத்தில் 128 பூக்கடைகள் அமைய உள்ளது. கழிவறை, சாய்தள வசதி, இருசக்கர வாகன நிறுத்துமிட வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால்வாய் வசதி, சாலை வசதி, உயர்மின் கோபுர வசதி ஆகியற்றுடன் புதிய மார்க்கெட் கட்டப்படுகிறது. 

இந்த மார்க்கெட்டையும், புதிய பஸ் நிலையம் கட்டும் பணியையும் ஈரோடு ஜிஎம்எஸ் எலிகண்ட் பில்டர்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

புதிய மார்க்கெட் கட்டும் பணியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 1 வருடத்திற்கு மேல் ஆகியும் மார்க்கெட் கட்டும் பணி 50 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. 

பொதுப்பணித்துறையாக இருந்திருந்தால்...எ.வ.வேலு கடுப்பு

இந்நிலையில் மார்க்கெட் கட்டும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். 

மார்க்கெட் கட்டும் பணி தாமதமாக நடைபெற்று வருவதை பார்த்த எ.வ.வேலு, எனது துறையான பொதுப்பணித்துறையாக இருந்தால் பிழந்தெடுத்திருப்பார்கள், காலையில் வேலை நடைபெறும் இடத்திற்கு வரும் பொறியாளர் வேலை ஆட்கள் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும், வருகைப்பதிவேட்டை வாங்கி பார்த்து ஆள் குறைந்தால் உங்கள் மேலதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும், அடுத்து தரத்தை சோதிக்க வேண்டும் என்றார். 

இதையடுத்து அனைத்து தரச்சான்றிதழ்களும் இருக்கிறதா? என ஒப்பந்ததாரரிடம் கேட்டார். அவர்கள் இருக்கிறது என்றனர். எம் சேன்ட், தண்ணீர் டெஸ்ட் செய்யப்பட்டதா? இரும்புகளின் தரம் சோதிக்கப்பட்டதா? என கிடுக்குப்பிடி கேள்விகளை  கேட்டார். இந்த வேகத்தில் போனால் எப்படி சரி வரும்? என்ற கேள்விக்கு வருகிற ஜூலை மாதம் 30ந் தேதிக்குள் 90 சதவீத வேலைகளை முடித்து விடுவதாக ஒப்பந்தாரர் உறுதி அளித்தார். நீங்கள் வேலையை முடித்தால்தான் கடைகளுக்கான ஏலத்தை நடத்த உத்தரவிட முடியும் என அமைச்சர் கூறினார். 

இந்த மார்க்கெட்டில் 20 மீன் விற்பனை கடைகளையும், 20 இறைச்சி கடைகளையும் அனுமதிக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுருத்தினார். 

பிறகு புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை பார்வையிட்டார். புதிய பஸ் நிலையம்  பின்புறம் உள்ள அரசு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த உத்தரவிட்டார். அங்குள்ள ஓடை மீது மிகுந்த கனத்தை தாங்க கூடிய தளத்தை அமைத்து அதை சுற்றிலும் 7 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் கட்டவும் உத்தரவிட்டார். ரெயில்வே துறையில் அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகும் என்பதால் மேம்பாலத்திலிருந்து பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் சிறு பாலம் கட்டும் பணியை கைவிட்டு விட்டு அதற்கு பதில் பஸ்கள் சுற்றி வருகிற படி ரவுண்டனா கட்டப்படும் எனவும் அமைச்சர் கூறினார். 

அமைச்சருடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, நகராட்சி ஆணையாளர்  தட்சணாமூர்த்தி, நகர கழக செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகரமன்ற துணை தலைவர் ராஜாங்கம் மற்றும் பலர் சென்றிருந்தனர். 

----------------------------------


Next Post Previous Post

No comments