வெளிநாட்டவரை தங்க வைத்தால்-போலீஸ் எச்சரிக்கை

வெளிநாட்டவரை தங்க வைத்தால்-போலீஸ் எச்சரிக்கை

ஜெர்மனிநாட்டவர் இறந்ததை அடுத்து அதிரடி

உரிய அனுமதியில்லாமல் வெளிநாட்டவரை தங்க வைத்தால் நடவடிக்கை பாயும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெளிநாட்டவரை தங்க வைத்தால்-போலீஸ் எச்சரிக்கை

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாதந்தோறும் சுமார் 1500 வெளிநாட்டினர் வருகை புரிகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆன்மீகத்தை நாடி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கெனவே முறையாக அனுமதி பெற்ற C-FORM பயனாளர் அடையாள எண் உடைய ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள், தங்குவதற்கு இடமளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெளிநாட்டினர் பலருக்கு வீடுகளிலோ, தங்கும் விடுதிகளிலோ அல்லது அகதிகள் முகாம்களிலோ காவல்துறையிடம் எவ்வித தகவலும், அனுமதியும் இல்லாமல் மாவட்டத்தில் உள்ளவர்கள் வாடகைக்கு விடுவதாக புகார்கள் வருகின்றன.

குறிப்பாக திருவண்ணாமலை நகர பகுதி மற்றும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள வீடு மற்றும் விடுதி உரிமையாளர்கள் தங்களது குடியிருப்புகளில் அனுமதி பெறாமலும், போதிய பாதுகாப்பின்றியும் வெளிநாட்டவரை தங்கவைத்து வருகின்றனர்.

இதனால் வெளிநாட்டவர் எங்கே தங்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல் தெரியாமல் போவதால் அவர்களின் விசா நீடிப்பு, விசா மாற்றம், இதர சேவையை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

வெளிநாட்டவரை தங்க வைத்தால்-போலீஸ் எச்சரிக்கை

எனவே இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்களை தங்குவதற்கு அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் அந்த நபர் குறித்த அடிப்படை விரவங்களை ஆன்லைன் மூலம் C-FORM-ஆக பதிவுசெய்ய வேண்டும். C-FORM தகவல் இல்லாமலோ அல்லது வேறு முகவரியில் எடுத்த C-FORMமை வைத்தோ வெளிநாட்டவர்களுக்கு தங்க இடமளித்தால், சம்பந்தப்பட்ட தங்குமிடத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, வெளிநாட்டவரை தங்களது வீடு, தங்கும் விடுதி, ஆசிரமம், மருத்துவமனை, பள்ளி அல்லது கல்லூரி போன்ற வளாகங்களில் தங்க வைப்பதற்க்காக பிரத்யேக இணையதள முகவரியின் பயனாளர் அடையாள எண் மற்றும் அதற்க்கான வழிமுறைகள் திருவண்ணாமலை மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டில் அருணாசலம் என்பரது வீட்டில் தங்கியிருந்த ஸ்வென்(வயது 57) என்ற ஜெர்மனி நாட்டவர் பூட்டிய அறைக்குள் பிணமாக கிடந்தார். கதவை உடைத்து அவரது உடலை போலீசார் மீட்டனர். 

இதையடுத்தே வெளிநாட்டவர்களை உரிய அனுமதி பெற்ற பிறகே தங்க வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

-------------------------------------


Next Post Previous Post

No comments