மேலும் ஒரு வெளிநாட்டு பக்தர் மரணம்-போலீஸ் விசாரணை
மேலும் ஒரு வெளிநாட்டு பக்தர் மரணம்-போலீஸ் விசாரணை
திருவண்ணாமலையில் முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பக்தர் ஒருவர் இறந்தார்.
ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகின்றனர். அண்ணாமலையாரை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும், ரமணாசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம் செல்லவும், தியானத்தில் ஈடுபடவும் வெளிநாட்டு பக்தர்கள் அதிகம் பேர் வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் வீடுகளையும், விடுதிகளையும் வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர்.
கடந்த 8ந் தேதி திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டில் அருணாசலம் என்பரது வீட்டில் தங்கியிருந்த ஸ்வென்(வயது 57) என்ற ஜெர்மனி நாட்டவர் பூட்டிய அறைக்குள் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து அவரது உடலை மீட்டனர்.
அருணாசலம், உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டவரை தங்க வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து வெளிநாட்டவர்களை தங்குவதற்கு அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் அந்த நபர் குறித்த அடிப்படை விரவங்களை ஆன்லைன் மூலம் C-FORM ஆக பதிவுசெய்ய வேண்டும்.
ஸ்வென் |
C-FORM தகவல் இல்லாமலோ அல்லது வேறு முகவரியில் எடுத்த C-FORM - மை வைத்தோ வெளிநாட்டவர்களுக்கு தங்க இடமளித்தால், சம்பந்தப்பட்ட தங்குமிடத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு வெளிநாட்டு பக்தர் இறந்தார். அவரது பெயர் கிளைவ் பெடரிக் நியூமன்(வயது 85). லண்டனைச் சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்வில்லை. 32 வருடங்களுக்கு முன் லண்டனிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார். தனது பெயரை காளிபாபா என மாற்றிக் கொண்டு காலையிலும், மாலையிலும் சைக்கிளில் கிரிவலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் கிளைவ் பெடரிக் நியூமன், மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு உதவிட யாரும் இல்லாததால் கடந்த 2022ம் ஆண்டு மருத்துவ உதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். அவரது தலையின் இடது பக்கம் முழுவதும் புண்ணாக இருந்தது. அவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பிறகு கலெக்டரின் பரிந்துரையின் பேரில் சமூக நலத்துறை மூலமாக கிரிவலப்பாதை அடிஅண்ணாமலையில் உள்ள சின்னதுரை நகரில் இருக்கும் மோஹன்ஜி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் புற்று நோய் தாக்கத்தால் இன்று அவர் இறந்தார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
No comments