லஞ்சம்: விஜிலென்சில் சிக்கிய வி.ஏ.ஓ

லஞ்சம்: விஜிலென்சில் சிக்கிய வி.ஏ.ஓ 

ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிய போது சிக்கினார்

பட்டா மாறுதலுக்காக விவசாயிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. விஜிலென்சில் சிக்கினார். 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(30). இவர் தனது தந்தை சேகருக்கு உதவியாக 2 ஏக்கர் 75 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர், தனது மகன் மாணிக்கத்திற்கு 50 சென்ட் விவசாய நிலத்தை கிரயமாக வழங்கியுள்ளார்.

இதையடுத்து பட்டா மாறுதலுக்காக ஆன்லைன் மூலம் மாணிக்கம் விண்ணப்பித்தார். அதற்கான அரசு கட்டணத்தையும் செலுத்தி உள்ளார். இதையடுத்து ஆத்துரை கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும் உதவியாளர் பூங்கொடி ஆகியோர் மாணிக்கத்தை அழைத்து விசாரணை நடத்தினர். 

சிலம்பரசன்

பிறகு பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என அவர்கள் கேட்டார்களாம். அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லை என்றும் மாணிக்கம் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் மற்றும் உதவியாளர் பூங்கொடியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்கள் பட்டா மாறுதல் மனுவை 3 மாதமாக கிடப்பில் போட்டு விட்டார்களாம். இதையடுத்து கடந்த 3ம் தேதி வி.ஏ.ஓ. சிலம்பரசனை, மாணிக்கம் போனில் தொடர்பு கொண்ட போது ரூ.3 ஆயிரம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என கறாராக சொல்லி விட்டாராம். 

லஞ்சம் கொடுக்க பணம் இல்லாமல் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் மாணிக்கம் புகார் அளித்தார். 

திருவண்ணாமலை விஜிலன்ஸ் டிஎஸ்பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி ஆகியோர் கொண்ட குழுவினர் வி.ஏ.ஓ. சிலம்பரசனை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து மாணிக்கத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி அவரை பின் தொடர்ந்து சென்றனர்.  

இன்று காலை சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் மாணிக்கத்திடமிருந்து வி.ஏ.ஓ. சிலம்பரசன் பணத்தை பெற்ற போது விஜிலென்ஸ் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இதே போல் பட்டா மாறுதலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் தீனதயாளன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post

No comments