திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை அளிக்கிறது
திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை அளிக்கிறது
கலெக்டர் பேட்டி- பிளஸ்-2 தேர்வில் 2530 மாணவர்கள் பெயில்
பிளஸ்-2 தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடமான 38வது இடத்தை பெற்றிருப்பது வேதனையான விஷயம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்ட தேர்ச்சி விகிதம் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை எழுதிய 12 ஆயிரத்து 724 மாணவர்களில் 11 ஆயிரத்து 037 பேரும், 13 ஆயிரத்து 827 மாணவிகளில் 12 ஆயிரத்து 984 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்வு எழுதிய 26 ஆயிரத்து 551 பேரில் 24ஆயிரத்து 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 38 வது இடத்தில் உள்ளது. (கடந்த ஆண்டு 35வது இடம்) அதே சமயம் கடந்த ஆண்டு 89.80 ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 90.47 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தேர்ச்சி சதவீதம் உயர்ந்து இருந்தாலும் கூட கடைசி இடத்தில் இருப்பது வேதனையான விஷயம்தான்.
அரசு பள்ளிகளை பொருத்தவரை திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் 35 வது இடத்தில் உள்ளது. மொத்தம் உள்ள 152 பள்ளிகளில் 8211 மாணவர்களும், 10,131 மாணவிகளும் ஆக 18,342 நபர்கள் தேர்வு எழுதி இருந்தார்கள் அதில் 6755 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். 9352 மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மொத்தமாக 87.81 சதவீதம் தேர்ச்சியாகும்.
நமக்கும், முதலாவது உள்ள மாவட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் ஏழு சதவீதம் தான். வருகின்ற ஆண்டுகளில் மாணவர்கள் தேர்வை அணுகுகின்ற விதம் எப்படி உள்ளது? ஆசிரியர்களை எப்படி நாம் கையாளுகிறோம்? என்பதை ஆராய்ந்து இந்த வருடம் அதை மேம்படுத்துவோம். ஏழு சதவீதம் எப்படி குறைந்தது என்பதை பற்றி ஆராய்வோம். கடந்த ஆண்டு கடந்த தவறுகளை கணக்கெடுப்போம்.
பழங்குடியினர் பள்ளிகளில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆசிரியர்களின் நியமித்து வகுப்புகளை நடத்தினோம். அது நமக்கு கை கொடுத்துள்ளது. 99.02 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. அதையே மற்ற பள்ளிகளும் பின்பற்றலாம் என்று நினைக்கிறோம். இதனால் தேர்ச்சி அதிகரிக்கும்.
ஆரம்ப நிலையில் இருந்து மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் அதிக அளவு தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெறாதவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி கல்வி கற்க செய்ய வேண்டும் அப்போதுதான் இடை நின்றல் இல்லாமல் போகும். உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
---------------------------------
No comments