விஜிலென்சில் சிக்கிய நகராட்சி அலுவலர்கள்

விஜிலென்சில் சிக்கிய நகராட்சி அலுவலர்கள்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு- ஓய்வு பெற்ற ஆசிரியரை 4 மாதமாக அலைய விட்ட அலுவலர்கள்- ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது பிடிபட்டனர். 

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.30ஆயிரம் லஞ்சம் பெற்ற திருவண்ணாமலை நகராட்சி அலுவலர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

விஜிலென்சில் சிக்கிய நகராட்சி அலுவலர்கள்

திருவண்ணாமலை தாளகிரி அய்யர் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திர அய்யர். இவரது மகன் ஆர்.ரமேஷ் (வயது 64). விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருகிறார். அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு சகோதரர், நான்கு சகோதிரிகள்  உடன் பிறந்தவர்கள் ஆவர். 

ராமச்சந்திர அய்யர் மற்றும் அவரது மனைவி இறந்த பிறகு தாளகிரி அய்யர் தெருவில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. தனக்கு வந்த சொத்தை தந்தையின் பெயரிலிருந்து தனது பெயருக்கு வரி மாற்றம் செய்ய ரமேஷ், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் 4 ந் தேதி அதற்குரிய பணத்தை கட்டி விண்ணப்பித்திருந்தார். 

இது சம்மந்தமாக பல முறை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றும் அவரது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நகராட்சி வருவாய் உதவியாளர் ராகுல் என்பவர் ரமேசை தொடர்பு கொண்டு நகராட்சி அலுவலகத்திற்கு வரும்படி கூறியிருக்கிறார். அங்கு சென்ற ரமேஷிடம் வருவாய் ஆய்வாளர் செல்வராணி, உங்கள் சொத்து நகரின் மையப்பகுதியில் உள்ளது. மார்க்கெட் மதிப்பு அதிகம். எனவே சொத்து வரி மாற்றம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டாராம். 

விஜிலென்சில் சிக்கிய நகராட்சி அலுவலர்கள்
செல்வராணி

இதனால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு பணம் என்னால் தர முடியாது என சொன்னதற்கு கடைசியாக ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என கறாராக சொல்லி அனுப்பி விட்டார்களாம். 

லஞ்சம் தர விருப்பம் இல்லாத ரமேஷ், இது குறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம்  ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்கள் 30 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். 

விஜிலென்சில் சிக்கிய நகராட்சி அலுவலர்கள்
ராகுல் 

இந்த பணத்தை ரமேஷ், வருவாய் உதவியாளர் ராகுலிடம் கொடுத்த போது மறைந்திருந்த டிஎஸ்பி திருவேல் முருகன் தலைமையிலான விஜிலென்ஸ் போலீசார் ராகுலை கையுங்களவுமாக பிடித்தனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் செல்வராணி, உதவியாளர் ராகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments